தமிழக காவல்துறை உள்ளிட்ட 3 துறைகளில் 3,597 பேருக்கு தற்காலிகத் தேர்வு – பட்டியல் வெளியீடு
சென்னை:
தமிழ்நாடு காவல்துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் ஆகிய 3 துறைகளில் காலியாக உள்ள 3,665 பணியிடங்களை நிரப்புவதற்கான பொதுத் தேர்வு 2025-ன் தற்காலிகத் தேர்வுப் பட்டியலை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் சார்பில், இரண்டாம் நிலைக் காவலர்கள், இரண்டாம் நிலை சிறைக் காவலர்கள் மற்றும் தீயணைப்பாளர்கள் ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்காக, கடந்த 21.08.2025 அன்று அறிவிக்கை எண் 02/2025 வெளியிடப்பட்டு பொதுத் தேர்வு நடத்தப்பட்டது.
இத்தேர்வின் மூலம் மொத்தம் 3,665 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில், 68 விண்ணப்பதாரர்கள் மெச்சத்தகுந்த விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீட்டின் கீழ், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் (SDAT) ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கான பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து, மீதமுள்ள 3,597 தற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பட்டியல் இன்று (01.11.2026) தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnusrb.tn.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளது.
சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவப் பரிசோதனை
தற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்படுவதற்கு முன்னர், மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படும். மேலும், விண்ணப்பதாரர்கள் சமர்ப்பித்துள்ள சான்றிதழ்களின் உண்மைத்தன்மை மற்றும் அவர்களின் முன்வரலாறு (Antecedents) ஆகியவை முழுமையாகச் சரிபார்க்கப்படும்.
இந்தச் சரிபார்ப்புகள் மற்றும் மருத்துவப் பரிசோதனைகள் நிறைவடைந்த பின்னரே, தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு காவல்துறை, சிறைகள் மற்றும் தீயணைப்புத் துறைகளில் 3,597 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவுள்ள நிலையில், தேர்வான விண்ணப்பதாரர்கள் தங்களது அடுத்தகட்டத் தேர்வு நடைமுறைகள் குறித்த விவரங்களை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

