தமிழகம் முழுவதும் ஆட்டோ கட்டணம் மறுநிர்ணயம்!
குறைந்தபட்சக் கட்டணம் ரூ.50; ஒவ்வொரு கூடுதல் கிலோமீட்டருக்கும் ரூ.25
அதிக கட்டணம் வசூலித்தால் புகார் தெரிவிக்கலாம்!
சென்னை:
தமிழகம் முழுவதும் ஆட்டோ ரிக்ஷாக்களுக்கான கட்டணம் மறுநிர்ணயம் செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, குறைந்தபட்சக் கட்டணம் ரூ.50 ஆகவும், 1.8 கிலோமீட்டர் தொலைவுக்குப் பிறகு ஒவ்வொரு கூடுதல் கிலோமீட்டருக்கும் ரூ.25 கட்டணமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆ. விஜய் தமிழன் பார்த்திபன் தலைமையில், கடந்த ஜூலை 9, 2026 அன்று ஆட்டோ ரிக்ஷா சங்கங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புக் கூட்டமைப்புகளுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, ஆட்டோ கட்டணத்தை மறுநிர்ணயம் செய்வதற்காக அலுவலர் குழு அமைக்கப்பட்டது.
ஆட்டோ ரிக்ஷா உரிமையாளர்கள், ஓட்டுநர் சங்கங்கள் மற்றும் நுகர்வோர் அமைப்புகளின் கருத்துகள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் இந்தக் குழு பரிந்துரைகளை வழங்கியது. அதன் அடிப்படையில், தமிழகம் முழுவதும் பொருந்தும் வகையில் புதிய கட்டணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஆறு மாதங்களுக்குள் கட்டணமானியை மாற்ற வேண்டும்!
ஆட்டோ ரிக்ஷா உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள், ஆறு மாத காலத்திற்குள் தங்களது வாகனங்களில் உள்ள கட்டணமானிகளைப் புதிய கட்டண விகிதங்களுக்கு ஏற்ப மறுசீரமைத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதுவரை, போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள கட்டண அட்டையைப் பதிவிறக்கம் செய்து, பொதுமக்களின் பார்வையில் படும்படி ஆட்டோவில் வைத்திருக்க வேண்டும். இதன் மூலம் பயணிகள் நிர்ணயிக்கப்பட்ட கட்டண விவரங்களை அறிந்துகொள்ள முடியும்.
மேலும், ஆட்டோவில் வைக்கப்பட்டுள்ள கட்டண அட்டையில் இடம்பெற்றுள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்து, அதன் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். போக்குவரத்துத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://tnsta.gov.in/ மூலமாகவும் கட்டண அட்டையைப் பார்வையிடலாம்.
அதிக கட்டணம் வசூலித்தால் புகார் தெரிவிக்கலாம்!
ஆட்டோ ஓட்டுநர்கள் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட அதிகமாகக் கட்டணம் வசூலித்தால், பொதுமக்கள் புகார் தெரிவிக்க வசதியாகக் கட்டணமில்லா தொலைபேசி எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புகார் தெரிவிக்க வேண்டிய கட்டணமில்லா எண்: 1800 425 5430.
புதிய கட்டண நிர்ணயத்தின் மூலம் ஆட்டோ ஓட்டுநர்களின் நலனையும், பயணிகளின் நுகர்வோர் உரிமைகளையும் கருத்தில் கொண்டு கட்டண நடைமுறையைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

