தமிழகம் முழுவதும் செப்-26 நியாய விலைக் கடைகளில் eKYC சிறப்பு முகாம்
காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் – விடுபட்ட குடும்ப அட்டைதாரர்கள் பயன்படுத்திக் கொள்ள அழைப்பு
சென்னை, செப்.25:
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கான கைரேகை அடிப்படையிலான ஆதார் சரிபார்ப்பு (eKYC) சிறப்பு முகாம் நாளை (செப்.26) நடைபெறுகிறது.
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013-ன்படி, முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைகளில் இணைக்கப்பட்டுள்ள அனைத்து பயனாளிகளின் ஆதார் விவரங்களைச் சரிபார்த்து, கைரேகை அடிப்படையிலான eKYC பதிவை மேற்கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதன்படி, குடும்ப உறுப்பினர்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில், கடந்த அக்டோபர் 2023 முதல் நியாய விலைக் கடைகள் மூலம் eKYC பதிவு நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி, முன்னுரிமை குடும்ப அட்டைகளில் 96.57 சதவீதம் eKYC பதிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
eKYC பதிவை 100 சதவீதம் நிறைவு செய்யும் நோக்கில், நாளை (26.09.2026) தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
இருப்பினும், இடைத்தேர்தல் நடைபெறவுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளில் இந்த சிறப்பு முகாம் நடைபெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, இதுவரை நியாய விலைக் கடைகள் மூலம் கைரேகை அடிப்படையிலான eKYC பதிவை மேற்கொள்ளாமல் விடுபட்டுள்ள குடும்ப அட்டைதாரர்கள், நாளை நடைபெறும் சிறப்பு முகாமை பயன்படுத்தி தங்களது eKYC பதிவை நிறைவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

