விவசாய விளைபொருட்களுக்கு ஆதார விலை நிர்ணயம் செய்தால் விவசாயிகளை பாதுகாக்க முடியும்: வேளாண்மை ஆய்வு இயக்குனர் சந்தீபன் பாக்ஸி பேச்சு
தருமபுரி, செப். 15:
மாநில மாநாடு நடைபெறுவதையொட்டி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மண்டல கருத்தரங்கம் தருமபுரி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் 31-ஆவது மாநில மாநாடு செப். 27 முதல் 29 வரை தூத்துக்குடியில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டையொட்டி தருமபுரியில் மண்டல கருத்தரங்கம் மாவட்ட செயலாளர் சோ. அருச்சுனன் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் எம். குமார் வரவேற்றார். மாவட்ட செயலாளர்கள் கிருஷ்ணகிரி சி. பிரகாஷ், சேலம் ஆர். ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
குறைந்தபட்ச ஆதரவு விலை – கொள்முதல் என்ற தலைப்பில் பெங்களூரு வேளாண் ஆய்வுகளுக்கான அறக்கட்டளை இயக்குனர் சந்தீபன் பாக்ஸி பேசியதாவது:
இந்திய பொருளாதாரம் மிகப்பெரிய நெருக்கடியை சந்தித்து வருகிறது. கடந்த 20 வருடமாக வேளாண்மைத் துறை நெருக்கடியை சந்தித்து வருகிறது. வேளாண்மையில் ஈடுபடும் விவசாய குடும்பங்களின் எண்ணிக்கை 50 சதவீதத்திலிருந்து 38 சதவீதமாக குறைந்துள்ளது. குறிப்பாக சிறு, குறு விவசாயிகளின் வருமானம் குறைந்துள்ளது. இந்தியாவில் 40 சதவீத விவசாய குடும்பங்களில் 3 கோடியே 78 லட்சம் விவசாய குடும்பங்கள் ஏழ்மையில் உள்ளதாக அரசு புள்ளிவிவரம் தெரிவித்துள்ளது.
வேளாண்மையில் ஈடுபட்ட குடும்பங்கள் போதிய வருமானம் இல்லாமல் 10 சதவீத குடும்பங்கள் வேறு துறைகளுக்கு வேலை தேடிச் சென்று விட்டனர். இதற்கு காரணம் விவசாயிகளின் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்யவில்லை. பெரும்பாலான விவசாயிகள் விவசாய உற்பத்தி செய்யும் பொருட்களை சந்தைப்படுத்த முடியவில்லை. தனிநபர் கடன் பெற்று விவசாயம் செய்கின்றனர். தங்களின் விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும் வரை காத்திருக்க முடிவதில்லை. வர்த்தகர்கள் விலை நிர்ணயம் செய்யும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
சிறுதானியமும் பருப்பு வகைகளும் மனிதன் சுகாதாரமாக வாழ அதிக அளவில் உற்பத்தி செய்ய வேண்டியுள்ளது. சிறுதானிய உற்பத்தி நிலப்பரப்பு குறைந்து வருகிறது. ஏன் என்றால் குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கவில்லை. சிறுதானியங்களை அதிக அளவில் விளைவிக்க வேண்டுமென்றால் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.
தற்போது விவசாயிகள் சந்திக்கின்ற பிரச்சினை விதை, உரம், டீசல், பெட்ரோல் விலை உயர்வு அதிகமாக உள்ளது. 10 ஆண்டுகளில் இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது. விவசாய வருமானம் குறைந்தால் வேளாண்மை உற்பத்தியில் இருந்து வெளியேறி விடுவார்கள்.
எனவே, சி-2 + 50 என்பதை உறுதி செய்ய வேண்டும். ஏ-2 என்பது விவசாயி விவசாயத்திற்காக செலவிடும் மூலதனத் தொகையாகும். எஃப்.எல். என்பது விவசாயம் செய்ய விவசாயிகளின் குடும்ப உறுப்பினர்கள் விவசாய வேலையில் ஈடுபடுவது. இதே வேறு இடத்தில் வேலை செய்தால் அவர்களுக்கு ஊதியம் கிடைக்கும். இதனைக் கணக்கிட்டு ஏ-2 + எஃப்.எல். இணைத்து ஆதரவு விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.
மேலும், சி-2 என்பது ஒரு நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்வது, குடும்ப உறுப்பினர்களின் உழைப்பு, வட்டிக்கு கடன் வாங்கி விவசாயம் செய்வது இவற்றை கணக்கிடுவதாகும்.
இந்த மூன்றையும் கணக்கிட்டு விவசாய விளைபொருட்களுக்கு ஆதரவு விலை நிர்ணயம் செய்ய வேண்டும். சி-2 உடன் 50 சதவீதம் இணைத்து எம்.எஸ். சுவாமிநாதன் பரிந்துரைப்படி உற்பத்திச் செலவை கணக்கிட்டு விளைபொருட்களுக்கு ஆதரவு விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.
கடந்த 10 ஆண்டுகளில் ஒன்றிய அரசு சி-2 + 50 சதவீதம் என்ற விலை நிர்ணயம் 70 சதவீதம் முதல் 80 சதவீத விவசாயிகளுக்கு மட்டுமே கிடைத்தது. உற்பத்திச் செலவில் ஒன்றரை மடங்கு உயர்த்தி தருவதாக ஒன்றிய அரசும் ஊடகங்களும் பொய் சொல்கின்றன.
நெல் உற்பத்தியில் 25 சதவீதமும், கோதுமை உற்பத்தியில் 30 சதவீதமும், பருப்பு வகையில் 8 சதவீதம் மட்டுமே அரசு கொள்முதல் விலை நிர்ணயம் செய்கிறது. அரசு கொள்முதலை உத்தரவாதப்படுத்த வேண்டும். இதில் வர்க்க முரண்பாடு உள்ளது.
குறிப்பாக சிறு, குறு விவசாயிகள் விளைபொருட்களை கொண்டு செல்ல வாகன வசதி இல்லை. பொருட்களை வைக்க இருப்பிடம் இல்லை. விவசாயம் செய்ய வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். சிறு, குறு விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களை அரசு கொள்முதல் செய்ய வேண்டும். உற்பத்திச் செலவு குறைந்து, மகசூல் அதிகரித்தால் விவசாயிகளை காப்பாற்ற முடியும்.
விவசாயிகளுக்கு நல்ல விதை, பாசன வசதி கிடைக்க வேண்டும். விவசாயத் தொழில்நுட்பத்திற்கு நிதி ஒதுக்கீடு வேண்டும். சி-2 + 50 ஆதரவு விலை நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசினார்.
வன விலங்குகளால் விவசாயத்தில் ஏற்படும் இழப்பு என்ற தலைப்பில் விவசாயிகள் சங்க மாநில தலைவர் டி. ரவீந்திரன் பேசியதாவது:
உலக அளவில் வனவிலங்குகளாலும், பறவைகளாலும் பயிர் சேதம் ஏற்படுகிறது. அமெரிக்காவில் பயிர் சேதம் குறித்து ஆய்வு செய்தனர். ஒரு ஆண்டுக்கு 220 மில்லியன் டாலர் சேதம் ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளனர். பொதுவாக மாமிச உண்ணிகள், தாவர உண்ணிகளாலும் பயிர் சேதம் ஏற்பட்டு இழப்பு ஏற்படுகிறது. வனவிலங்குகளான யானை, காட்டுப்பன்றி, மான் போன்ற விலங்குகளாலும் பயிர் சேதம் ஏற்படுகிறது.
பயிர் அறுவடைக்கு முன்பாக 20 சதவீதத்திலிருந்து 40 சதவீதம் வரை சேதம் ஏற்படுகிறது. அறுவடைக்கு முன்பு, அறுவடைக்குப் பின்பு என இரு வகையாக சேதம் ஏற்படுகிறது. பொருட்கள் இருப்பு வைக்கும் போது பூச்சி, எலி, ஈரப்பதத்தால் சேதம் ஏற்படுகிறது. இந்த சேதத்தால் தரம், சக்தி குறைவு ஏற்படுகிறது. விதை முளைப்புத் திறன் பாதிக்கப்படுகிறது.
தமிழகத்தில் மயிலால் பாதிப்பு ஏற்படுகிறது. விளைப் பயிர்களை பறவைகள் சாப்பிடுவதை விட, சாப்பிட முயற்சிக்கும் போது 5 சதவீதம் சேதம் ஏற்படுத்துகிறது. இதனால் சமூகத்திற்கு பாதிப்பு, தனிப்பட்ட விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. காப்பித் தோட்டத்தில் குரங்குகளால் பாதிப்பு, பழத்தோட்டங்களில் அணில், குரங்கு, வவ்வால், கிளிகளால் பாதிப்பு ஏற்படுகின்றது.
இந்தியாவில் வனவிலங்குகளாலும் பறவைகளினாலும் பெரும் பாதிப்பை விவசாயிகள் சந்திக்கின்றனர். இந்த பாதிப்புகளில் இருந்து தடுக்க விஞ்ஞான ரீதியாக அணுகுமுறை இந்தியாவில் இல்லை. குறிப்பாக சீனாவில் இதற்கென்று ஒரு துறை உள்ளது.
தமிழகத்தில் காட்டுப்பன்றிகளால் பயிர் சேதம் ஏற்படுகிறது. கேரளாவைப் போன்று வனவிலங்கு பட்டியலில் இருந்து காட்டுப்பன்றியை நீக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வன விலங்குகளால் மனித உயிர் பறிபோகிறது. கடந்த 10 ஆண்டுகளில் யானை தாக்கி நீலகிரி மாவட்டத்தில் மட்டும் 152 பேர் இறந்துள்ளனர்.
வன விலங்குகள் குடிநீர், உணவு தேடி வனத்தில் இருந்து வெளியே வருவதைத் தடுக்க உணவு, குடிநீர் வனத்தில் கிடைக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். பயிர் சேதத்தைத் தடுக்கவும், பொருளாதார இழப்பைத் தடுக்கவும், வன விலங்குகளிடமிருந்து மனித உயிர்களைப் பாதுகாக்கவும் தமிழ்நாடு, இந்தியாவில் தனித்துறை உருவாக்க வேண்டும். விவசாய பிரதிநிதிகளின் ஆலோசனை பெற்று உரிய நிதி ஒதுக்க வேண்டும் என பேசினார்.

கிராமப்புற வேலைவாய்ப்பு சட்டம் என்ற தலைப்பில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் எம். சின்னதுரை பேசியதாவது:
விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், தொழிலாளர்கள் இவை மூன்றும் ஒரு மாற்று சக்தியாகும். உழைப்பை விற்று பிழைக்கக்கூடியவர்கள் தான் விவசாயக் கூலித் தொழிலாளர்கள். விவசாயத் தொழிலாளர்களைப் பற்றிப் பேச தனித்துறை இல்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதான் போராடி பல நல்ல திட்டங்களை கொண்டுவந்துள்ளது.
நாடு சுதந்திரம் அடைந்த பின் விவசாயத் தொழிலாளர்களுக்கு நிலம் கொடுக்க வேண்டும் என்று சொன்னது கம்யூனிஸ்ட் கட்சி. 1951 ஆம் ஆண்டு முதல் 1958 வரை விவசாயக் கூலித் தொழிலாளர்கள் யார் என்பதை அடையாளம் காட்டவில்லை. யாரெல்லாம் உழைப்பை செலுத்துகிறார்களோ அவர்கள் எல்லாம் விவசாயத் தொழிலாளர்கள் என முடிவு செய்தனர். குறைந்தபட்ச கூலி சட்டம் கொண்டுவரவில்லை.
விவசாயக் கூலித் தொழிலாளர்களின் உழைப்பை சுரண்ட ஏராளமான கார்ப்பரேட் முதலாளிகள் உள்ளனர். 1981 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட விவசாயத் தொழிலாளர் சங்கம் பண்ணை அடிமை முறை, சாணிப்பால் சவுக்கடிக்கு எதிராக போராடியது. மனிதனை மனிதனாக மதிக்க வேண்டும் என்று போராடியது.
முதன்முதலாக 2004 ஆம் ஆண்டில் இடதுசாரி கட்சிகளின் முயற்சியால் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் கொண்டுவரப்பட்டு, 2005 ஆம் ஆண்டில் சட்டமாக்கப்பட்டது. இதனால் 26 கோடி விவசாயத் தொழிலாளர்கள் பயனடைந்தனர். கொரோனா காலத்தில் வேலை கிடைத்தது. மக்கள் பயனடைந்த இந்தத் திட்டத்தை வி.பி., ராம்ஜி திட்டம் என மாற்றிவிட்டனர். 100 நாள் வேலை என்பதை 125 நாள் வேலை கொடுப்போம் என்பது ஏமாற்று வேலை. இந்தத் திட்டத்தை எதிர்த்துப் போராட வேண்டும் என பேசினார்.
கூட்டுறவு அமைப்பை பாதுகாப்போம் என்ற தலைப்பில் ஒருங்கிணைப்பாளர் அ. கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது:
1904 ஆம் ஆண்டு கூட்டுறவுத் துறை உருவாக்கப்பட்டு 122 ஆண்டுகள் ஆகிறது. நுகர்வோர் கூட்டுறவு, விவசாயக் கூட்டுறவு என 14 துறைகள் உள்ளன. பால்வளம், மீன், சிறுதொழில் என பல்வேறு துறைகளில் கூட்டுறவு அமைப்புகள் செயல்படுகின்றன.
கூட்டுறவு அமைப்புகளால் தான் மக்களுக்கு நல்லது செய்ய முடியும். விவசாயிகள் 80 சதவீதம் தனியார் நிதி வணிக நிறுவனங்களிடம் கடன் பெறுகின்றனர். 10.8 சதவீதம் மட்டுமே கிராம வங்கிகளில் கடன் பெறுகின்றனர்.
நாம் கூட்டுறவு அமைப்பில் கவனம் செலுத்த வேண்டும். இல்லை என்றால் கூட்டுறவுத் துறையை களவாடிவிடுவார்கள். 1921 ஆம் ஆண்டிற்குப் பிறகு ஒன்றிய அரசு கூட்டுறவு அமைப்பை தனித்துறையாக உருவாக்கியது. தற்போது அமித்ஷா அமைச்சராக உள்ளார்.
கூட்டுறவுத் துறையில் 50 கோடி பேரை இணைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் நோக்கம் மற்ற துறைகளில் உள்ளவர்களை ஆதார் கொண்டு அனைவரையும் இணைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் நோக்கம் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. ஆட்களை உறுப்பினர்களாக சேர்ப்பது.
கூட்டுறவுத் துறையை நாம் எவ்வாறு பயன்படுத்த வேண்டும். இல்லை என்றால் கூட்டுறவுத் துறையை அமித்ஷா சங்கமாக மாற்றி விடுவார். கூட்டுறவுத் துறையை பாதுகாக்க வேண்டும். கேரளாவில் கூட்டுறவுத் துறை சிறப்பாக செயல்படுகிறது. கூட்டுறவுத் துறையை பாதுகாப்பதன் மூலம் நாட்டின் வளர்ச்சி, விவசாயிகளின் வளர்ச்சியை பாதுகாக்க முடியும் என பேசினார்.
மேலும் கருத்தரங்கில் மாவட்ட நிர்வாகிகள் ஏ. குமார், பி. இளம் பரிதி, கே. என். மல்லையன், மாவட்ட பொருளாளர் ஆர். சின்னசாமி ஆகியோர் பங்கேற்று பேசினர்.

