தருமபுரி கோட்டை அருள்மிகு ஸ்ரீ காமாட்சி உடனாகிய மல்லிகார்ஜுனேஸ்வரர் திருக்கோயில் குடமுழுக்கு பெருவிழா
தருமபுரி நகர், கோட்டை அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்பிகை உடனாகிய மல்லிகார்ஜுனேஸ்வர சுவாமி திருக்கோயிலில் புனருத்தாரண, ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா குடமுழுக்கு (கும்பாபிஷேக) நன்னீராட்டு பெருவிழா சாஸ்திர சம்பிரதாயங்களுடன் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
வேளாவனத்தில் அமைந்ததால் “திருவேளாலீஸ்வரம்” எனவும், கொங்கு நாட்டு சிவ வைப்புத் தலங்களில் ஒன்றாக ஏழாம் நூற்றாண்டில் சுந்தரமூர்த்தி சுவாமிகளால் தேவாரப் பாடல் பெற்ற சிறப்புடைய இத்திருத்தலத்தில், பஞ்சபாண்டவர்களில் அர்ஜுனனுக்கு சிவபெருமான் அருள் புரிந்து அவரது சிவசாபம் நீக்கியதால் இறைவன் “மல்லிகார்ஜுனேஸ்வரர்” எனப் போற்றப்படுகிறார். மனித வாழ்க்கைக்குத் தேவையான பதினெட்டு நற்குணங்களை பதினெட்டு படிகளாகக் கொண்டு, தாய்மையின் முழுவடிவமாய் அன்னை கல்யாண காமாக்ஷி அம்பிகை எழுந்தருளியுள்ள இத்தலத்தில், ‘ரத்னத்ரயம்’ எனப்படும் மூன்று சூலங்களைத் தாங்கி மகிஷாசூரனை வதம் செய்யும் கம்பீரத் திருக்கோலத்தில் சங்க காலக் கொற்றவை ராஜதுர்க்கையும் அருள் பாலிக்கிறார்.
மேலும் ஸ்ரீராமனுக்காகத் தமிழ் குறுமுனி அகத்தியர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீ சக்ர யந்திரம், நுளம்ப பல்லவர்களால் காமாக்ஷி ஆலயத்தில் செதுக்கப்பட்ட ஸ்ரீராமாயண சுவரோவியச் சிற்பங்கள், கட்டிடக்கலை அதிசயமான தொங்கும் தூண் மற்றும் அஷ்டதிக் பாலகர்களின் சிற்பங்கள் எனப் பல்வேறு கலை நயங்களுடன் இத்தலம் திகழ்கிறது. கடையெழு வள்ளல்களில் ஒருவரான அதியமான் நெடுமான் அஞ்சி, தமிழ்ப் புலவர் ஔவையாருக்குச் சாகா வரம் தரும் அரிதான நெல்லிக்கனியை ஈந்த வரலாற்றுப் பெருமை கொண்ட இச்சிவாலயம், சரத்குமார் நதியை தீர்த்தமாக கொண்டு மூர்த்தி, தலம், தீர்த்தம் எனும் மூன்றினாலும் சிறப்புற்று விளங்குகிறது. இத்தகைய சிறப்பு மிக்க திருக்கோவிலில் விமானங்கள் புதுப்பிக்கப்பட்டு கருங்கற்களால் சிற்ப மற்றும் வர்ண வேலைப்பாடுகள் நிறைவடைந்தது தொடர்ந்து ஆகஸ்ட் 27-ம் தேதி யாகசாலை பூஜைகளுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக விநாயகர், சுப்பிரமணியர், ராஜதூக்கை, சித்தேஸ்வரர், காலபைரவர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு திருக்குடமுழுக்கு சிறப்பாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து யாகசாலையில் இருந்து மகாபூர்ணாஹீதிக்குப் பின் புனித கலசங்கள் புறப்பட்டு அருள்மிகு காமாட்சி அம்பிகை மற்றும் மல்லிகார்ஜுன சுவாமி விமான கோபுரங்களுக்கு மகா கும்பாபிஷேகம் விமர்சியாக நடைபெற்றது. தொடர்ந்து மூலாலய தெய்வங்களுக்கு புனித நீரால் நன்னீரட்டு செய்யப்பட்டு மகா அபிஷேகம், தீபாராதனைகள் மற்றும் உலக நன்மை வேண்டி கூட்டுப் பிரார்த்தனைகள் நடைபெற்றது. பின்னர் சுவாமிக்கும், அம்மாளுக்கும் திருக்கல்யாண வைபவம் அரோகரா கோஷத்துடன் கோலாகலமாக நடைபெற்றது .முன்னதாக வெள்ளிக்கிழமை 28/ 8/ 2026 நடைபெற்ற யாகசாலை பூஜையில் உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர். மகாதேவன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். அவருக்கு திருக்கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டு அருட்பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இப்புனித பெருவிழாவில் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள், திருப்பணி உபயதாரர்கள் மற்றும் தருமபுரி சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பல்லாயர்களுக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து அருள் பெற்றனர். திருக்கோவில் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

