ஆகம விதிகளின்படி அமைந்த 34,971 திருக்கோயில்கள்: பொதுமக்கள் கருத்து தெரிவிக்க 30 நாட்கள் அவகாசம்
சென்னை: தமிழ்நாட்டில் ஆகம விதிகளின்படி நிர்மாணிக்கப்பட்டுள்ள திருக்கோயில்களை கண்டறியும் பணியின் ஒரு பகுதியாக, ஆகமக் குழுவால் பரிசீலிக்கப்பட்ட 34,971 திருக்கோயில்கள் தொடர்பான விவரங்கள் பொதுமக்களின் பார்வைக்காக வெளியிடப்பட்டுள்ளன. இவ்விவரங்கள் தொடர்பாக பொதுமக்களுக்கு ஏதேனும் விடுபாடுகள் அல்லது கருத்துகள் இருந்தால், அவற்றை 30 நாட்களுக்குள் தெரிவிக்கலாம் என இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
மாண்பமை சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மாண்பமை உச்சநீதிமன்றம் ஆகியவற்றின் உத்தரவுகளின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு இந்து சமய திருக்கோயில்களில் ஆகம விதிகளின்படி நிர்மாணிக்கப்பட்டுள்ள திருக்கோயில்களை கண்டறிவதற்காக, கடந்த 06.10.2025 அன்று ஐந்து நபர்களைக் கொண்ட ஆகமக் குழுவை அமைத்து ஆணை பிறப்பித்தது.
இதனைத் தொடர்ந்து, திருக்கோயில்களின் ஆகமம் தொடர்பான விவரங்கள், சம்பந்தப்பட்ட இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர்கள் மற்றும் உதவி ஆணையர்களால் ஆகமக் குழுவின் முன்பு சமர்ப்பிக்கப்பட்டன. அவ்வாறு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளை குழுவினர் கவனமாகப் பரிசீலனை செய்தனர்.
இந்நிலையில், ஆகமக் குழுவால் பரிசீலனை செய்யப்பட்ட திருக்கோயில்களின் விவரங்களில் ஏதேனும் விடுபாடுகள் இருந்தாலோ அல்லது பொதுமக்களுக்கு கருத்துகள் இருந்தாலோ அவற்றைத் தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என குழு முடிவு செய்துள்ளது.
அதன்படி, ஆகமக் குழுவால் பரிசீலனை செய்யப்பட்ட 34,971 திருக்கோயில்கள் தொடர்பான விவரங்கள், இந்து சமய அறநிலையத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.hrce.tn.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளன.
பொதுமக்கள் இவ்விவரங்களைப் பார்வையிட்டு, ஏதேனும் விடுபாடுகள் அல்லது கருத்துகள் இருந்தால், ஆகம விதிகளின்படி நிர்மாணிக்கப்பட்ட திருக்கோயில்களை கண்டறிவதற்காக அமைக்கப்பட்ட குழுவிற்கு, தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகம், 119, உத்தமர் காந்தி சாலை, நுங்கம்பாக்கம், சென்னை–34 என்ற முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது துறையின் இணையதளம் வாயிலாகவோ தெரிவிக்கலாம்.
அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் பொதுமக்கள் தங்களது கருத்துகள் மற்றும் விடுபாடுகளைத் தெரிவிக்க வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

