இந்தியாவின் முதல் பெண் மரைன் என்ஜினியர் – சோனாலி பானர்ஜியின் சாதனை
ஆகஸ்ட் 27, 1999 – இந்திய கடல்சார் வரலாற்றில் ஒரு முக்கியமான நாள். ஆண்கள் ஆதிக்கம் செலுத்திய மரைன் என்ஜினியரிங் துறையில், தடைகளைத் தாண்டி இந்தியாவின் முதல் பெண் மரைன் என்ஜினியராக சோனாலி பானர்ஜி வரலாறு படைத்தார். இந்திய அரசின் துறைசார் ஆவணங்களிலும் சோனாலி பானர்ஜி, இந்தியாவின் முதல் பெண் மரைன் என்ஜினியர் எனப் பதிவிடப்பட்டுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் அலகாபாத் நகரில் பிறந்த சோனாலி பானர்ஜிக்கு சிறு வயதிலிருந்தே கடல் மற்றும் கப்பல்கள் மீது ஆர்வம் இருந்தது. அவரது உறவினர்கள் மெர்ச்சன்ட் நேவியில் பணியாற்றியதன் மூலம், கடலில் பயணிக்கும் வாழ்க்கை குறித்த ஆர்வம் அவருக்குள் மேலும் அதிகரித்தது.
1,500 பேரில் ஒரே பெண்
1995-ஆம் ஆண்டு கொல்கத்தா அருகே உள்ள Marine Engineering Research Institute (MERI)-யில் மரைன் என்ஜினியரிங் படிப்பில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வில் சோனாலி வெற்றி பெற்றார். அந்தக் கல்வி நிறுவனத்தில் சேர்ந்த சுமார் 1,500 கேடட்டுகளில் அவர் மட்டுமே பெண் மாணவியாக இருந்தார். அப்போது பெண்களுக்கான தனிப்பட்ட விடுதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள்கூட இல்லாத சூழல் நிலவியது.
ஆனால் இந்தச் சூழல் சோனாலியின் இலக்கை மாற்றவில்லை. நான்கு ஆண்டுகள் கடுமையாகப் படித்து, 1999-ஆம் ஆண்டு மரைன் என்ஜினியரிங் படிப்பை சிறப்புடன் நிறைவு செய்தார்.
கடலில் பணியாற்றிய முதல் இந்தியப் பெண்
படிப்பை முடித்த பிறகும் சோனாலிக்கு சவால்கள் தொடர்ந்தன. பெண் என்பதன் காரணமாக கப்பல்களில் பயிற்சி பெறுவதற்கும் வேலைவாய்ப்பு பெறுவதற்கும் தயக்கம் காட்டப்பட்டதாக அதிகாரப்பூர்வ ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.
பின்னர் Mobil Shipping Company-யில் வாய்ப்பு பெற்ற அவர், இலங்கை, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், தாய்லாந்து, ஹாங்காங், பிஜி மற்றும் வளைகுடா பகுதிகள் உள்ளிட்ட சர்வதேச கடல் வழித்தடங்களில் பயிற்சி பெற்றார். 2001-ஆம் ஆண்டு ஆகஸ்டில் கப்பலில் பணியில் இணைந்து, அதன் என்ஜின் அறையின் பொறுப்பை ஏற்றதன் மூலம் கடலில் பணியாற்றிய முதல் இந்தியப் பெண் மரைன் என்ஜினியராகவும் அவர் முன்னுதாரணமானார்.
பெண்களுக்கு புதிய பாதை
சோனாலி பானர்ஜியின் சாதனை ஒரு தனிநபரின் வெற்றி மட்டுமல்ல; இந்திய கடல்சார் துறையில் பெண்களுக்கான புதிய பாதையைத் திறந்த வரலாற்றுச் சாதனையாகவும் பார்க்கப்படுகிறது. அவரது முன்னுதாரணத்தைத் தொடர்ந்து, பல பெண்கள் மரைன் என்ஜினியரிங் மற்றும் கடல்சார் தொழில்களில் தங்கள் திறமையை வெளிப்படுத்தத் தொடங்கினர்.
இந்திய கடல்சார் துறையின் முன்னோடிப் பெண்களைப் பட்டியலிடும் மத்திய அரசின் ஆவணங்களிலும் சோனாலி பானர்ஜியின் பெயர் “First Woman Marine Engineer” என இடம்பெற்றுள்ளது.
ஆண்கள் மட்டுமே சாதிக்க முடியும் எனக் கருதப்பட்ட ஒரு துறையில், தனது திறமை மற்றும் விடாமுயற்சியால் தடைகளை உடைத்து முன்னேறிய சோனாலி பானர்ஜி, இந்திய பெண்களின் சாதனை வரலாற்றில் என்றும் நினைவுகூரப்பட வேண்டிய முன்னோடியாகத் திகழ்கிறார்.

