தமிழ்நாடு முழுவதும் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் ஆகஸ்ட் 29-ல் eKYC சிறப்பு முகாம்
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் வரும் ஆகஸ்ட் 29-ஆம் தேதி, குடும்ப அட்டைதாரர்களுக்கான eKYC சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013-ன் படி, முன்னுரிமை குடும்ப அட்டைகள் மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைகளில் இடம்பெற்றுள்ள பயனாளிகளின் ஆதார் விவரங்களைச் சரிபார்ப்பதற்காக, மின்னணு குடும்ப அட்டையில் இணைக்கப்பட்டுள்ள அனைத்து பயனாளிகளுக்கும் கைரேகை அடிப்படையிலான சரிபார்ப்பு (eKYC) மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி, குடும்ப உறுப்பினர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில், அக்டோபர் 2023 முதல் குடும்ப உறுப்பினர்களின் கைரேகை சரிபார்ப்பு (eKYC) பணி நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி, முன்னுரிமை குடும்ப அட்டைகளில் 96.21 சதவீதம் eKYC பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.
eKYC பதிவினை 100 சதவீதம் நிறைவு செய்யும் நோக்கில், 29.08.2026 அன்று தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாம் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும்.
எனவே, இதுவரை நியாயவிலைக் கடைகள் மூலம் கைரேகைப் பதிவு (eKYC) செய்யாமல் விடுபட்டுள்ள குடும்ப அட்டைதாரர்கள், வரும் 29.08.2026 அன்று மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் நடைபெறும் சிறப்பு முகாமைப் பயன்படுத்தி, தங்களது கைரேகைப் பதிவு (eKYC) பணியை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

