அனுமன் தீர்த்தத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலைய அறை பூட்டப்பட்டதைக் கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியம், காட்டேரி ஊராட்சிக்கு உட்பட்ட அனுமன் தீர்த்தம் கிராமத்தில், ஊராட்சி அலுவலகத்தின் பின்புறம் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிப்பு குடிநீர் நிலையத்தின் கட்டுப்பாட்டு அறை பூட்டப்பட்டதைக் கண்டித்து, ஆகஸ்ட் 14ஆம் தேதி அப்பகுதி பொதுமக்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முன்னாள் ஊராட்சி மன்ற செயலாளர் சரவணன், குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் கட்டுப்பாட்டு அறையை பூட்டிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, முன்னாள் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் வி. கோவிந்தசாமி தலைமையில், நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் அறையை பூட்டிச் சென்றதாகக் கூறப்படும் ஊராட்சி செயலாளர் சரவணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பொதுமக்களுக்கு தடையின்றி சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஸ்வரன் ஆகியோர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், பூட்டப்பட்டிருந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் அறை திறக்கப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டிற்காக குடிநீர் வழங்கப்பட்டது.

