தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில் 80-வது சுதந்திர தின விழா மற்றும் மாபெரும் மரம் நடும் விழா
தருமபுரி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின்படியும், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படியும் 80-வது சுதந்திர தின விழா மற்றும் மாபெரும் மரம் நடும் விழா சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவிற்கு தருமபுரி மாவட்ட முதன்மை மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான திருமதி கே. சுதா அவர்கள் தலைமை வகித்து, தேசியக் கொடியை ஏற்றி விழாவைத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் சிறப்புரையாற்றி, மரக்கன்றுகளை நட்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மரங்களின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மட்டும் சுமார் 150 மரக்கன்றுகள் நடப்பட்டன. மேலும், வனத்துறையினர் சார்பில் வழங்கப்பட்ட மரக்கன்றுகளைக் கொண்டு தடங்கம் ஹைவே முதல் நீதிமன்றம் செல்லும் சாலை வரை சுமார் 100 மரக்கன்றுகள், முதன்மை மாவட்ட நீதிபதி அவர்களின் வழிகாட்டுதலின்படி நடவு செய்யப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் கூடுதல் மாவட்ட நீதிபதி திருமதி ஜோதி, குடும்பநல நீதிபதி திருமதி அமுதா, போக்சோ நீதிபதி திருமதி அசின் பானு, தலைமை குற்றவியல் நீதிபதி, முதன்மை சார்பு நீதிபதி, கூடுதல் சார்பு நீதிபதி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி திருமதி தமயந்தி உள்ளிட்ட அனைத்து நீதித்துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

மேலும், தருமபுரி வழக்கறிஞர் சங்கத் தலைவர் திரு. அழகுமுத்து, வழக்கறிஞர்கள் திருமதி சங்கீதா, திரு.நேரு பாபு மற்றும் மூத்த வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
வனத்துறையினர் சார்பில் சுமார் 150 மரக்கன்றுகள் வழங்கப்பட்டு, மரம் நடும் விழாவிற்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்பட்டது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பசுமை பரப்பை அதிகரித்தல் மற்றும் எதிர்கால தலைமுறையினருக்கு தூய்மையான சுற்றுச்சூழலை உருவாக்குதல் ஆகியவற்றை வலியுறுத்தும் வகையில் இம்மாபெரும் மரம் நடும் விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை தருமபுரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, தருமபுரி மாவட்ட நீதிமன்றம், தருமபுரி வழக்கறிஞர் சங்கம் மற்றும் வனத்துறை ஆகியோர் இணைந்து சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

