நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்
தருமபுரி: நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் தருமபுரி பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும், இந்திய விண்வெளி மையத்தை தனியார்மயமாக்கக் கூடாது, இளநிலை மருத்துவக் கல்விக்கான இடங்கள் வேகமாகத் தனியார்மயமாகி வருவதைத் தடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
மேலும், விராம்ஜி திட்டத்தைக் கைவிட்டு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும், இந்தியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தைக் கைவிட வேண்டும், விவசாயிகளின் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும், விவசாயத் தொழிலாளர் நல வாரியம் அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். மகளிர் உரிமைத் தொகையை ரூ.2,500 ஆக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளையும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.
ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் ஜி. பச்சாகவுண்டர் தலைமை வகித்தார். கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜெ. பிரதாபன், சிறப்புரையாற்றினார்.
இதில் மாவட்டப் பொருளாளர் ஈ. அலமேலு, மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பி. இரவி, எம். அழகேசன், வெ. பை. மாதையன், என்.பி. ராஜி, எம். குமார், ஜி. ராஜகோபால், வி. செல்வம், ஜி. சம்பத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

