பொதுமக்கள் அளிக்கும் தகுதியான மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காண வேண்டும் அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியமான் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் வே. சரவணன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 932 மனுக்கள் பெறப்பட்டன.இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வே. சரவணன் தெரிவித்ததாவது:
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, பேருந்து வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் கோரியும், பட்டா, சிட்டா பெயர் மாற்றம், புதிய குடும்ப அட்டை, வாரிசுச் சான்றிதழ், வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாகவும் மனுக்கள் அளித்தனர்.
மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை மற்றும் உதவி உபகரணங்கள் கோரியும் மனுக்கள் அளிக்கப்பட்டன. இவ்வாறு மொத்தம் 932 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட அனைத்து மனுக்களும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கப்பட்டு, உரிய நடவடிக்கை மேற்கொண்டு, தகுதியான மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காண வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்கள் மீது துறை அலுவலர்கள் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காண வேண்டும்எனவும்உத்தரவிடப்பட்டுள்ளது.மேலும், தருமபுரி மாவட்டத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வே. சரவணன் தெரிவித்தார்.

நலத்திட்ட உதவிகள் வழங்கல்
இக்கூட்டத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் 20 பேருக்கு இலவச மின் பட்டாவுக்கான ஆணைகள் வழங்கப்பட்டன. உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்பில் ஒருவருக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைவழங்கப்பட்டது.மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், மாற்றுத்திறனாளி ஒருவர் சாலையோரத்தில் கடை அமைப்பதற்காக நெடுஞ்சாலைத்துறையினரிடமிருந்து தற்காலிக அனுமதி பெறுவதற்கான கடிதம் வழங்கப்பட்டது.
மேலும், தருமபுரி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐ.டி.ஐ.) 2026-ஆம் ஆண்டு பயிற்சியை முடித்து, பல்வேறு நிறுவனங்களில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் தேர்வு செய்யப்பட்ட 267 பேருக்கு வேலைவாய்ப்புக்கான பணி ஆணைகளை மாவட்ட ஆட்சியர் வே. சரவணன் வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆர். கவிதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மதுமதி, தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் ஜார்ஜ், அரூர் வருவாய் கோட்டாட்சியர் சி. செம்மலை, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி.) பா. ஷெர்லி ஏஞ்சலா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சு. சரவணன், அரசு ஐ.டி.ஐ. முதல்வர் டி.கே. சிவகுமார் உள்ளிட்ட தொடர்புடைய அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

