தொகுதி மறுவரையறை தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை
தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் பங்கேற்ற தொகுதி மறுவரையறை தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் உள்ள கூட்ட அரங்கில் நேற்று (ஆக. 8) பிற்பகல் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், தொகுதி மறுவரையறை தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் ந. ஆனந்த், பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும், இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ப. சிதம்பரம், அக்கட்சியின் மாநிலத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாணிக்கம் தாகூர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் தொல். திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கே. சுப்பராயன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கே. நவாஸ் கனி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் தலைமைச் செயலாளர் முனைவர் மு. சாய்குமார் மற்றும் அரசு உயர் அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

