முதலமைச்சர் கோப்பை–2026 விளையாட்டுப் போட்டி:ஆகஸ்ட் 6 முதல் இணையதளத்தில் பதிவு தொடக்கம்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆண்டுதோறும் நடத்தி வரும் முதலமைச்சர் கோப்பை–2026 விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க விரும்புவோர், ஆகஸ்ட் 6 முதல் இணையதளம் வாயிலாக பதிவு செய்யலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவில் நடைபெறும் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள், விளையாட்டுத் திறமைகளை ஊக்குவித்து, அனைத்து தரப்பினரையும் விளையாட்டில் ஈடுபடுத்தும் நோக்கில் நடத்தப்பட்டு வருகின்றன. திறமையான விளையாட்டு வீரர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு உரிய அங்கீகாரம் மற்றும் பரிசுகளை வழங்குவதே இந்தப் போட்டிகளின் முக்கிய நோக்கமாகும்.
பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இந்த ஆண்டுக்கான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள், வரும் செப்டம்பர் 4ஆம் தேதி மாவட்ட அளவில் தொடங்கப்பட உள்ளன. இதில் பங்கேற்க விரும்புவோர் 06.08.2026 முதல் 31.08.2026 வரை tncmtrophy.sdat.in இணையதளத்தில் தேவையான ஆவணங்களுடன் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
கடந்த ஆண்டு நடைபெற்ற 38 வகையான விளையாட்டுப் போட்டிகளுடன், இந்த ஆண்டு முதல் வில்வித்தை, வுஷூ (Wushu), துப்பாக்கிச் சுடுதல், யோகா, மல்லர்கம்பம், ஸ்பீடு ஸ்கேட்டிங், கயாக்கிங் (Kayaking), கேனோயிங் (Canoeing) உள்ளிட்ட புதிய விளையாட்டுகளும் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மொத்தம் 45 வகையான விளையாட்டுப் போட்டிகள் செப்டம்பர் முதல் அக்டோபர் மாதம் வரை நடைபெறவுள்ளன.
இந்தப் போட்டிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் 19 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவியர்கள் (01.01.2008 அல்லது அதற்குப் பின் பிறந்தவர்கள்), இளங்கலை முதலாம் ஆண்டு முதல் முதுகலை இரண்டாம் ஆண்டு வரை மற்றும் பாலிடெக்னிக் மாணவ, மாணவியர்கள் (01.07.2001 அல்லது அதற்குப் பின் பிறந்தவர்கள்), 15 முதல் 35 வயதுக்குட்பட்ட பொதுப்பிரிவினர், அனைத்து வயதினரையும் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் பங்கேற்கலாம்.
மாவட்ட மற்றும் மண்டல அளவிலான தனிநபர் போட்டிகளில் முதல் பரிசாக ரூ.3,000, இரண்டாம் பரிசாக ரூ.2,000, மூன்றாம் பரிசாக ரூ.1,000 வழங்கப்படும். மாநில அளவிலான தனிநபர் போட்டிகளில் முதல் பரிசாக ரூ.1 லட்சம், இரண்டாம் பரிசாக ரூ.75 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.50 ஆயிரம் வழங்கப்படும்.
குழுப் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு தலா முதல் பரிசாக ரூ.75 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.50 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.25 ஆயிரம் வழங்கப்படும்.
விளையாட்டில் ஆர்வமுள்ளவர்கள் தாங்களாகவோ அல்லது தங்கள் பள்ளி, கல்லூரிகள் மூலமாகவோ tncmtrophy.sdat.in இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மாவட்ட விளையாட்டு அலுவலகங்களைத் தொடர்புகொள்ளலாம்.
மேலும், “ஆடுகளம்” தகவல் தொடர்பு மையத்தை அனைத்து வேலை நாட்களிலும் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை, 95140 00777 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு கூடுதல் தகவல்களைப் பெறலாம் என்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

