தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 8, 9-ல் நியாயவிலைக் கடைகளில் eKYC சிறப்பு முகாம்
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும், குடும்ப அட்டைதாரர்களின் eKYC (கைரேகை அடிப்படையிலான ஆதார் சரிபார்ப்பு) பதிவை முழுமையாக நிறைவு செய்யும் நோக்கில், 2026 ஆகஸ்ட் 8 மற்றும் 9 ஆகிய இரண்டு நாட்களில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013-இன் கீழ், முன்னுரிமை குடும்ப அட்டைகள் மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைகளில் உள்ள அனைத்து உறுப்பினர்களின் ஆதார் விவரங்களை கைரேகை மூலம் சரிபார்த்து eKYC பதிவு மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி, கடந்த அக்டோபர் 2023 முதல் மாநிலம் முழுவதும் குடும்ப உறுப்பினர்களின் கைரேகை அடிப்படையிலான eKYC பதிவு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தற்போது, முன்னுரிமை குடும்ப அட்டைகளில் 95.86 சதவீதம் eKYC பதிவு நிறைவடைந்துள்ளது.
மீதமுள்ள குடும்ப அட்டைதாரர்களின் பதிவுகளை 100 சதவீதம் நிறைவு செய்யும் வகையில், ஆகஸ்ட் 8 மற்றும் 9 ஆகிய நாட்களில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை சிறப்பு eKYC முகாம் நடைபெறவுள்ளது.
எனவே, இதுவரை eKYC கைரேகை பதிவு மேற்கொள்ளாத முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைதாரர்கள், தங்களது அருகிலுள்ள நியாயவிலைக் கடைகளில் நடைபெறும் இந்த சிறப்பு முகாமில் கலந்து கொண்டு, eKYC பதிவை தவறாமல் மேற்கொள்ளுமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

