பதிவாளரின் ஊழியர் விரோத போக்கை கண்டித்து கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
பதிவாளரின் ஊழியர் விரோத போக்கை கண்டித்து, தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தின் சார்பில் தருமபுரி கூட்டுறவுத்துறை மண்டல இணைப் பதிவாளர் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இராமநாதபுரம் மண்டல இணைப் பதிவாளரால் கூட்டுறவு சார்பதிவாளர் வேல்முருகனுக்கு வழங்கப்பட்ட தற்காலிக பணிநீக்க ஆணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், கூட்டுறவுத்துறை ஊழியர்களின் உரிமைகளைப் பாதுகாத்து, அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
மேலும், பதிவாளரின் ஊழியர் விரோத போக்கையும், நுகர்வோர் பணிகள் கூடுதல் பதிவாளரின் தன்னிச்சையான அணுகுமுறையையும் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் செ. அனுமன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் செ. ராமன் மற்றும் மாவட்டப் பொருளாளர் நா. பாக்கியவதி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினர்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம். சுருளிநாதன், மாவட்ட இணைச் செயலாளர் முருகன் மற்றும் ஜாக்டோ-ஜியோ நிதிக் காப்பாளர் கே. புகழேந்தி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

