ஒகேனக்கல் ஆடிப்பெருக்கு விழாவில் உணவு பாதுகாப்புத் துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
தர்மபுரி மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் ஒகேனக்கல்லில் மூன்று நாட்கள் ஆடிப்பெருக்கு விழா நடைபெற்று வருகிறது.
விழாவின் தொடக்க நாளில், அரசு துறை அலுவலர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் முன்னிலையில், மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் தலைமையில், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ராஜ்குமார் அரசின் பல்துறை பணிகளை விளக்கும் 23 கண்காட்சி அரங்குகளை திறந்து வைத்து, பல்வேறு துறைகள் சார்ந்த நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கி விழாவை தொடங்கி வைத்தார்.
இதன் தொடர்ச்சியாக நடைபெற்ற இரண்டாவது நாள் நிகழ்ச்சியில், பல்துறை பணி விளக்கக் கண்காட்சியில் உணவு பாதுகாப்புத் துறை சார்பில் மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் கைலாஷ்குமார் தலைமையில், பென்னாகரம் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் பொதுமக்களுக்கு உணவுப் பொருட்களில் வீட்டிலேயே எளிதாக கலப்படத்தை கண்டறியும் முறைகள் குறித்து செயல்விளக்கம் அளித்தார்.

தேயிலை, தேன், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மிளகு, நெய், சமையல் எண்ணெய், பால், வெல்லம் உள்ளிட்ட அன்றாட உணவுப் பொருட்களில் கலப்படத்தை எவ்வாறு கண்டறிவது, அயோடின் கலந்த உப்பு மற்றும் அயோடின் இல்லாத உப்பை எவ்வாறு வேறுபடுத்துவது, அயோடின் சத்து உடல்நலத்திற்கு ஏன் அவசியம் என்பன குறித்து நேரடி விளக்கங்கள் வழங்கப்பட்டன. ஆடிப்பெருக்கு விழாவிற்கு வந்திருந்த பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் இந்த நிகழ்ச்சியை ஆர்வமுடன் பார்வையிட்டனர்.
மேலும், உணவுப் பொருள் பொதிகளில் கட்டாயம் இடம்பெற வேண்டிய விவரங்களான உணவுப் பொருளின் பெயர், உற்பத்தியாளர் முகவரி, தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி, சைவ/அசைவ குறியீடு, உணவு பாதுகாப்பு உரிம எண், நுகர்வோர் தொடர்பு எண், நிகர எடை, அதிகபட்ச சில்லறை விலை உட்பொருட்கள், ஊட்டச்சத்து விவரங்கள் மற்றும் ஒவ்வாமை தொடர்பான தகவல்கள் குறித்து உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் விரிவாக விளக்கமளித்தார். விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.
இதனுடன், சேலம் உணவுப் பகுப்பாய்வு கூடத்தின் முதுநிலை பொது பகுப்பாய்வாளர் நரசிம்மன் மற்றும் மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் கைலாஷ்குமார் ஆகியோரின் ஏற்பாட்டில் நடமாடும் உணவுப் பகுப்பாய்வு வாகனம் விழா வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. இதில் உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் மற்றும் இளநிலை பொது பகுப்பாய்வாளர் கார்த்திகேயன் ஆகியோர் எல்.இ.டி. தொடுதிரை வாயிலாக காணொளிகள் காட்சிப்படுத்தி, உணவுக் கலப்படம் கண்டறிதல் மற்றும் உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
மேலும், ஒகேனக்கல் பகுதியில் உள்ள தேநீர் கடைகள், உணவகங்கள் மற்றும் மீன் வறுவல் விற்பனை நிலையங்களில் இருந்து தேயிலை, பால், சமையல் எண்ணெய், மசாலாப் பொருட்கள், உப்பு, அடைக்கப்பட்ட குடிநீர் பாட்டில்கள் உள்ளிட்ட மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, நிகழ்விடத்திலேயே தரப்பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதேபோல், விற்பனை செய்யப்பட்ட மீன் வறுவல்களில் செயற்கை நிறம் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதும் ஆய்வு செய்யப்பட்டது.
இந்த ஆய்வில் 20-க்கும் மேற்பட்ட மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில், நான்கு மாதிரிகள் உணவு பாதுகாப்பு விதிமுறைகளுக்கு முரணாக தரமற்றதாக இருப்பது கண்டறியப்பட்டது. அதில் மசாலாப் பொருள், பால், உப்பு மற்றும் செயற்கை நிறம் பூசப்பட்ட மீன் வறுவல் ஆகியவை இடம்பெற்றிருந்தன. சம்பந்தப்பட்ட விற்பனையாளர்களுக்கு எச்சரிக்கை வழங்கப்பட்டதுடன், மேம்பாட்டு அறிவிப்பு வழங்கப்பட்டது.
கண்காட்சி அரங்கம் மற்றும் நடமாடும் உணவுப் பகுப்பாய்வு வாகனத்தை சுற்றுலாப் பயணிகள், அரசு அலுவலர்கள், மாவட்ட சுகாதார அலுவலர் ராஜேந்திரன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் சுகந்தபிரியா, சுற்றுலா உதவி அலுவலர் லவிஷா, வட்டார வளர்ச்சி அலுவலர் கல்பனா, இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் செல்வி, செயல்அலுவலர் கீதாஞ்சலி, பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள், நுகர்வோர் அமைப்பினர், மாணவர்கள் உள்ளிட்டோர் பார்வையிட்டு, உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரசுரங்களை பெற்றுச் சென்றனர்.

