காவிரி ஆற்றங்கரையின் அழகை ரசிக்க வியூ பாயின்ட் அமைக்கும் பணி ஆட்சியர் ஆய்வு
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், நாகமரை கிராமத்தில், சுற்றுலா துறையின் சார்பில் காவிரி ஆற்றங்கரையின் அழகை ரசிக்க சுற்றுலாப் பயணிகளுக்காக ரூ.109.00 இலட்சம் மதிப்பீட்டில் காட்சி முனை (View Point) அமைக்கப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், நாகமரை கிராமம், காவேரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஒரு அழகிய கிராமம். மேட்டூர் அணைக்குப் பின்னால் அமைந்துள்ள இந்தக் கிராமத்தின் இயற்கை அழகை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில், இப்பகுதியில் சுற்றுலாத் துறையின் சார்பில் சுற்றுலாப் பயணிகளுக்காக காட்சி முனை (View Point) அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள காட்சி முனையினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டார்கள்.

இதனைத் தொடர்ந்து, தருமபுரி மாவட்டம், ஏரியூர் ஊராட்சி ஒன்றியம், சுஞ்சல்நத்தம் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.2.15 இலட்சம் மதிப்பீட்டில் மாபெரும் மரக்கன்றுகள் நட்டு வைக்கும் பணி நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், ஒகேனக்கல் சுற்றுலா மையத்தில் உள்ள நுழைவு வாயில், பார்வையாளர் மாடம், டிக்கெட் கவுண்டர், பரிசல் நிறுத்துமிடம், பரிசல் சென்றடையும் பகுதி, மசாஜ் பகுதி, ஆழ்துளைக்கிணறு, உணவகம், சொகுசு நடைபாதை, எண்ணெய் கழிவு சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களை மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட சுற்றுலா அலுவலர் எம்.சங்கீதா, பென்னாகரம் வட்டாட்சியர் ஆறுமுகம், ஏரியூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குமரேசன், ரேணுகா, பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் லோகநாதன், ஜோதிகணேசன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.

