தருமபுரியில் வள்ளல் அதியமான் பிறந்த நாள் அரசு விழா
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், அதியமான் கோட்டை ஊராட்சி, வள்ளல் அதியமான் கோட்டத்தில் சித்ரா பவுர்ணமி – வள்ளல் அதியமான் அவர்களின் பிறந்த நாள் அரசு விழாவில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ், வள்ளல் அதியமான் மற்றும் ஒளவையார் ஆகியோரின் திருவுருவ சிலைகளுக்கு இன்று (01.05.2026) மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழ் சான்றோர்கள், விடுதலைப் போராட்ட தியாகிகள் மற்றும் தலைவர்கள் ஆகியோரை பெருமைப்படுத்தும் வகையில், அமைக்கப்பட்டுள்ள மணிமண்டபங்களில் அன்னார்களது பிறந்த நாளன்று ஆண்டுதோறும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அரசு விழாவாகக் கொண்டாட ஆணையிடப்பட்டுள்ளது.
நம் தாய் மொழியாம் தமிழ் மொழியை வளர்த்திட அரும்பாடுபட்ட தமிழறிஞர்கள், தமிழகத்தை உயர்த்திட தம் ஆயுளையே அர்ப்பணித்தார்கள். நாட்டின் விடுதலைக்கு பாடுபட்டு தம் இன்னுயிரை ஈந்த தியாகிகளை பெருமைப்படுத்தும் வகையில் தமிழகத்தில் பல்வேறு மணிமண்டபங்கள் அமைக்கப்பட்டு, அவற்றில் தமிழ்நாடு அரசின் சார்பில் ஆண்டுதோறும் பிறந்த நாள் விழா செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் கொண்டாடப்பட்டு வருகின்றது.
அந்த வகையில், வள்ளல் அதியமான் கோட்டத்தில் சித்ரா பவுர்ணமி தினமான இன்றைய தினம் வள்ளல் அதியமான் அவர்களின் பிறந்த நாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் வள்ளல் அதியமான் மற்றும் ஒளவையார் ஆகியோரின் திருவுருவ சிலைகளுக்கு மலர்தூவி, மாலை அணிவித்து மரியாதை செலுத்த்ப்பட்டது, தொடர்ந்து முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்துக்கொண்டு வள்ளல் அதியமான் மற்றும் ஒளவையார் ஆகியோரின் திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் வள்ளல் அதியமான் கோட்டம் ரூ.1.15 கோடி மதிப்பீட்டில் கடந்த 01.11.2006 அன்று அடிக்கல் நாட்டப்பட்டு, 2 ஏக்கர் மொத்த நிலப்பரப்பில் 6,190 சதுரஅடி கட்டட பரப்பளவில் 400 நபர்கள் அமரக்கூடிய பார்வையாளர் மண்டபத்துடன் அமைக்கப்பட்டும், மண்டபத்தின் வெளிப்புற முகப்பில் வள்ளல் அதியமான் மற்றும் ஔவையார் ஆகியோரின் முழு உருவ வெண்கலச் சிலைகளுடன் நிறுவப்பட்டும், 28.02.2009 அன்று அமைச்சர் பெருமக்களால் திறந்து வைக்கப்பட்டது. தற்போது வள்ளல் அதியமான் கோட்டம் ரூ. 1.00 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டுள்ளது.
மேலும், அதியமான் நெடுமான் அஞ்சி ஒரு கடையேழு வள்ளல்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். தகடூரை (தற்போதைய தருமபுரி) தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தவராவார். இவர் தனது வீரத்தின் மூலம் சேரன், சோழன், பாண்டியன் உட்பட ஏழு அரசர்களை வென்று, கொங்கு நாட்டில் அமைதியையும், நல்லாட்சியையும் நிலைநாட்டினார்.
சங்கப் புலவரான ஔவையாருக்கு அதியமான் நெடுமான் அஞ்சி நெருங்கியவனாக இருந்தார் என்று சங்கப் பாடல்கள் மூலம் அறியலாம். புறநானூறு, அகநானூறு, குறுந்தொகை, பதிற்றுப்பத்து, சிறுபாணாற்றுப்படை ஆகிய நூல்களில் அதியமான் பற்றிய குறிப்புகள் வருகின்றன.இவர் தனது ஆட்சியில் மக்களுக்கு பல நன்மைகளையும், திட்டங்களையும் செயல்படுத்தினார். மேலும், அவர் நல்ல ஆட்சியாளராகவும், சிறந்த வீரராகவும் திகழ்ந்தார். தகடூர் அதியமான் அவர்களின் வீரத்தையும், தமிழ்பற்றையும் அவர் பிறந்தநாளான இன்று நாம் போற்றுவோம். இவ்வாறு தெரிவித்தார்.
இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வெ.லோகநாதன், நல்லம்பள்ளி வட்டாட்சியர் பிரசன்னா, நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர் கலந்து கொண்டனர்.

