தருமபுரி பொறியில் கல்லூரியில் வாக்குப்பதிவு மின்னணு இயந்திரங்கள் பாதுகாப்பு அறைக்கு சீல் மூன்றாடுக்கு பாதுகாப்பு
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்திரவின் படி, தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் ஏப் – 23 அன்று தருமபுரி மாவட்டத்திலுள்ள 5 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குப்பதிவு செய்யப்பட்ட வாக்குப்பதிவு மின்னணு இயந்திரங்கள் தருமபுரி மாவட்டம், செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் தேர்தல் பொது பார்வையாளர்கள் டாக்டர்.ஹீரா லால், வந்தனா வைத்யா, மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர்திரு.ரெ.சதீஸ், ஆகியோர் தலைமையில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று ஏப்- 24மூன்றடுக்கு பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு முத்திரையிடும் (சீல்) பணி நடைபெற்றது.
தருமபுரி மாவட்டத்திலுள்ள 5 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குப்பதிவு செய்யப்பட்ட வாக்குப்பதிவு மின்னணு இயந்திரங்கள் தருமபுரி மாவட்டம், செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் கொண்டு வரபெற்று மூன்றடுக்கு பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு மின்னணு இயந்திரங்களை வாக்கு எண்ணும் நாள் வரை 330 ஆயுதம் ஏந்திய காவலர்கள் மற்றும் துணை ராணுவ படையினர்கள் 24 மணி நேரமும் கண்காணிக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மூன்றடுக்கு பாதுகாப்பு அறையில் முறைகேடுகள் நடைபெறாமல் இருக்க 24 மணி நேரமும் (24 x 7) 185 CCTV கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வரும். வேட்பாளர்களின் பிரதிநிதிகள் இந்த கண்காணிப்புப் பணியை பார்வையிட அனுமதிக்கப்படும். மூன்றடுக்கு பாதுகாப்பு பகுதிகளில் தடையில்லா மின்சாரம் மற்றும் தீயணைப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மேலும், மூன்றடுக்கு பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் தேர்தல் கால அட்டவணையின்படி வாக்கு எண்ணும் நாளில் திறக்கப்படும்.
இந்நிகழ்வின் போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ்.மகேஸ்வரன், மாவட்ட வருவாய் அலுவலர் ஆர். கவிதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரூபன் சங்கர் ராஜ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ஆர்.கே. கவிதா, மகளிர் திட்ட அலுவலர் சு.சுந்தர்ராஜன், அனைத்து சட்டமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மு. செல்வி (பாலக்கோடு), கோ. கோபு (பென்னாகரம்), த இரா.காயத்ரி (தருமபுரி), பெ.கி. கோவிந்தன் (பாப்பிரெட்டிப்பட்டி), சி. செம்மலை அரூர்(தனி) உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.

