தருமபுரியில் ஒருங்கிணைந்த புளி வணிக மையம் பிப் -21 ல் துவக்கம் மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ் தகவல்
தருமபுரி மாவட்டம், மதிகோண்பாளையம், தருமபுரி ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சார்பில் தற்காலிக ஒருங்கிணைந்த புளி வணிக மையம் மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் அவர்கள் வருகின்ற 21.02.2026 அன்று துவக்கி வைக்கப்படுவதையொட்டி, நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ்,(19.02.2026) நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர்.ரெ.சதீஸ், தெரிவித்ததாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 17.08.2025 அன்று தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் தருமபுரி மாவட்ட விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் ரூ.11.30 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த புளி வணிக மையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு, இந்தியாவில் புளி உற்பத்தியில் 25% க்கும் மேலாக பங்காற்றுகிறது. அதில் தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்கள் ஆண்டுக்கு சுமார் 20,570 மெட்ரிக் டன் புளி உற்பத்தி செய்து முக்கிய பங்களிப்பை வழங்குகின்றன.
தருமபுரி மாவட்டம், செல்லியம்பட்டி கிராமத்தில் ஒருங்கிணைந்த புளி வணிக மையத்திற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. அதற்கு முன்னோட்டமாக தற்காலிகமாக புளி வணிக மையத்தை தருமபுரி ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் வருகின்ற 21.02.2026 அன்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட உள்ளது. புதிய புளி வணிக மையம் அமைக்கப்படும் வரை காத்திராமல் புளி விவசாயிகள், புளி பதப்படுத்துபவர்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மற்றும் சிறு வியாபாரிகள் புளி விளைபொருளை தருமபுரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வந்து தேசிய வேளாண் சந்தை (e-NAM) முறையில் வணிகம் செய்து பயன்பெற்றுக்கொள்ள தேவையான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
புளி சேமிப்பு, செயலாக்கம் மற்றும் விற்பனைக்கு நவீன வசதிகளை ஏற்படுத்தி விவசாயிகளுக்கு எளிய முறையில் சந்தை அணுகல் மற்றும் விலை உயர்வு வாய்ப்புகளை வழங்குவதால் அதிக வருமானம் ஈட்ட வழிவகை செய்யப்படுகிறது.இதன் மூலம் விவசாயிகளுக்கு 7.5% பரிவர்த்தனைச் செலவு சேமிக்கப்படுவதுடன் 10,000 க்கும் மேற்பட்ட விவசாயக் குடும்பங்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு நேரடி/மறைமுக நன்மைகள் கிடைக்க வழி வகை செய்யப்படுகிறது, மேலும் விதையற்ற புளி கேக், புளி விழுது, இயற்கை புளி போன்ற மதிப்பேற்றப் பொருட்களின் உற்பத்தி, ஏற்றுமதி மேம்பாடு அடைவதால் அரசிற்கு ஆண்டுக்கு சுமார் ரூ.2 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும்.
இத்திட்டத்தின் மூலம் புளி உற்பத்தி செய்யக்கூடிய விவசாயிகள், புளி ஏற்றுமதியாளர்கள், விவசாயத் தொழில் முனைவோர்கள் மற்றும் புளி சார்ந்த தொழில் மேற்கொண்டுள்ள உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் பயனடைவர். விளைபொருளுக்கான ஆயுட்காலத்தை நீட்டித்து விளைபொருளுக்கு நல்ல விலை கிடைக்க செய்வதன் மூலம் இலாபத்தை அதிகரிக்கச் செய்யப்படும்.
இவ்விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர்கள், தருமபுரி மாவட்ட அரசு உயர் அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பயனாளி பெருமக்கள், விவசாய பிரதிநிதிகள் கலந்துகொள்ள உள்ளார்கள்.மேலும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் அவர்கள் பங்கேற்கும் தருமபுரி அரசு விழாவில் பொதுமக்கள் மற்றும் பயனாளிகள் மற்றும் புளி வணிகர்கள் பெருந்திரளாக கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ், தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது, தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் இரா.காயத்ரி, தருமபுரி புளி வணிகர்கள் சங்க தலைவர் ப.பாஸ்கர், புளி வணிகர்கள் சங்க செயலாளர் வினோபாஜ், மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சிவராமன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் வணிகர்கள் உடனிருந்தனர்.

