தருமபுரி நகராட்சி புதிய பேருந்து நிலையத்தினை காணொலிக் காட்சி வாயிலாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இன்று (05.02.2026) தருமபுரி மாவட்டத்தில், தருமபுரி நகராட்சி புதிய பேருந்து நிலையத்தினை காணொலிக் காட்சி வாயிலாக, திறந்து வைத்தார்கள். இந்நிகழ்ச்சியில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ், கலந்து கொண்டு, புதிய பேருந்து நிலையத்தினை பார்வையிட்டு, இரண்டு வழித்தட பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.
இந்நிகழ்ச்சிக்கு தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி அவர்கள் முன்னிலை வகித்தார்.அரசாணை (நிலை) எண்.50 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை நாள் 06.03.2019ன் படி தருமபுரி நகராட்சி சிறப்புநிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு, 33 வார்டுகளுடன் உள்ளடக்கியுள்ளது. இந்நகராட்சியின் மொத்த பரப்பளவு 11.65 சதுர கிலோ மீட்டர் பரப்புடன் 68619 மக்கள் தொகையுடன் 2011-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.
தருமபுரி நகர் மன்ற தீர்மானம் எண் 65, நாள் 17.04.2015ல் தனியாரிடமிருந்து தானமாக நிலம் பெற தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தனியாரிடமிருந்து 10 ஏக்கர் நிலம் (ஐந்து நபர்கள்) தானமாக பெறப்பட்டது.

10 ஏக்கர் பரப்பளவில் ரூ.39.14 கோடி மதிப்பீட்டில் தனியார் பங்களிப்புடன் அமைக்கப்பட்ட புதிய பேருந்து நிலையம்
தருமபுரி நகராட்சிக்கு அருகாமையில் உள்ள ஏ.ரெட்டிஅள்ளி கிராமம், சோகத்தூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் 10 ஏக்கர் பரப்பளவில் ரூ.39.14 கோடி மதிப்பீட்டில் தனியார் பங்களிப்புடன் (DBFOT முறையில்) பேருந்து நிலையம் அமைக்க அரசு ஆணை M.S. No. 75 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, நாள் 24.07.2018-ல் வெளியிட்டது.
வருடாந்திர கட்டணம் (Annual Concession Fees) ரூ.55,40,000/- (ரூபாய் ஐம்பத்தி ஐந்து லட்சத்து நாற்பதாயிரம் மட்டும்) 25 ஆண்டுகளுக்கு வழங்க உயர்ந்த (Highest) Request for Proposal (RFP) வழங்கியுள்ள M/s PVK CONSTRUCTIONS பெரம்பலூர் என்ற நிறுவனத்திற்கு 20.06.2024 அன்று மன்றத்தின் அனுமதி வழங்கப்பட்டது.
23.09.2024 அன்று M/S PVK CONSTRUCTIONS பெரம்பலூர் என்ற நிறுவனத்திற்கு Letter of Acceptance வழங்கப்பட்டு, 23.10.2024 அன்று ஒப்பந்தம் (Agreement) கையொப்பமிடப்பட்டது.புதிய பேருந்து நிலைத்தின் அனைத்து கட்டுமான பணிகளும் முடிக்கப்பட்டுள்ளது.
தருமபுரி நகராட்சிக்கு அருகிலுள்ள சோகத்தூர் பஞ்சாயத்திற்குட்பட்ட ஏ.ரெட்டிஅள்ளி பகுதியில் 10 ஏக்கர் பரப்பளவில் ரூ.39.14 கோடி மதிப்பீட்டில் தருமபுரி நகராட்சி புதிய பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணிகளும் முடிக்கப்பட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
பேருந்து நிலையத்தில் 55 கடைகள்
இப்புதிய பேருந்து நிலையத்தில் தற்போது தரைதளம் மற்றும் முதல் தளத்தில் கடைகள், 55 எண்ணிக்கையிலான பேருந்து நிறுத்தும் இடம், 3 உணவகங்கள், 45 எண்ணிக்கையிலான அறைகள், 4 கழிவறைகள், 2 எண்ணிக்கையிலான வாகன நிறுத்தங்கள், 1 தாய்மார்கள் பாலுட்டும் அறை, 128 எண்ணிக்கையிலான கண்காணிப்பு கேமராக்கள், 2 உயர் மின் கோபுர விளக்குகள், 40,000 லிட்டர் கொண்ட மேல்நிலை நீர்தேக்கதொட்டி, ATM மையம், பொருட்கள் வைப்பதற்கான பாதுகாப்பு அறை, நேரம் காப்பாளர் அறை, மேற்கூரை அமைக்கும் பணிகள், பயணிகள் மற்றும் ஓட்டுநர்கள் ஓய்வு அறைகள், நடைபாதை, பயணிகள் அமரும் இடத்தில் டைல்ஸ் பதிக்கும் பணிகள், பிரதான சாலை மற்றும் மழைநீர் வடிகால் பணிகள் போன்ற பணிகள் முடிக்கப்பட்டு, இன்று முதல் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி, தருமபுரிசட்டமன்றஉறுப்பினர்எஸ்.பி.வெங்கடேஸ்வரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ்.மகேஸ்வரன், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.கவிதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரூபன் சங்கர் ராஜ், தருமபுரி நகர மன்ற தலைவர் திருமதி.லட்சுமி நாட்டான் மாது, நகர மன்ற துணைத்தலைவர் .நித்யா அன்பழகன், பென்னாகரம் பேரூராட்சித் தலைவர் கி. வீரமணி, நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் (சேலம்) ப.அசோக்குமார், தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் இரா.காயத்ரி, தருமபுரி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சி.க.ஜெயதேவ்ராஜ், தருமபுரி நகராட்சி ஆணையர் இரா.சேகர், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, மின்சாரத்துறை உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள், இந்நாள், முன்னாள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

