வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்: மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஸ்
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக குறிஞ்சி கூட்டரங்கில் பாலக்கோடு, பென்னாகரம், தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் அரூர் (தனி) ஆகிய சட்ட மன்ற தொகுதிகளின் வாக்காளர் பட்டியல்கள் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்வது தொடர்பாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட பொருப்பாளர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ் நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையம், தருமபுரி மாவட்டத்தில் உள்ள 057-பாலக்கோடு, 058-பென்னாகரம், 059-தருமபுரி, 060-பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் 061-அரூர் (தனி) ஆகிய சட்ட மன்ற தொகுதிகளின் வாக்காளர் பட்டியல்கள் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ள ஆணையிட்டுள்ளது. அதன்படி இப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது தொடர்பாக இன்றைய தினம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணிகள் தொடர்பாக விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. அனைவரும் இப்பணிகள் சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு வழங்க கேட்டுக் கொள்ளப்பட்டது.
கால அட்டவணை, வாக்காளர் கணக்கெடுப்பு பணி காலம் 04.11.2025 முதல் 04.12.2025 வரை, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் நாள். 09.12.2025, ஆட்சேபனை மற்றும் முறையீட்டு காலம் 09.12.2025 முதல் 08.01.2026 வரை, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் நாள். 07.02.2026 ஆகும்இத்தகைய சிறப்பு தீவிர திருத்தப் பணி கடந்த 2002-ஆம் ஆண்டில்மேற்கொள்ளப்பட்டு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதற்கு பின்னர் 23 ஆண்டுகளுக்கு பின்னர் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள்மேற்கொள்ளப்படவுள்ளது. இந்தப் பணிகளுக்கான விதிமுறைகள், வழிகாட்டுதல்கள், இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இப்பணிக்காக தனிச் செயலியும் உறுவாக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் தொடர்புடைய அலுவலர்களுக்கு பயிற்சியும் ஆலோசனையும் வழங்கப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் நியமனம் செய்யப்பட்டுள்ள 1501 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் இப்பணியில் முழுமையாக ஈடுபடுவார்கள். இப்பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட மத்திய மற்றும் மாநில அரசியல் கட்சிகளால் நியனம் செய்யப்பட்டுள்ள வாக்குச்சாவடி முகவர்கள் கணக்கெடுப்பு படிவங்களை மீண்டும் பெறவதற்கு மட்டும் உதவி செய்வார்கள். வாக்குச்சாவடி நிலை அலுவலர், அவருடைய வாக்குச்சாவடிக்குட்பட்ட தற்போது நடைமுறையில் உள்ள வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர் ஒவ்வொருவருக்கும் புகைப்படத்துடன் கூடிய, வாக்காளரின் விவரங்கள் அச்சிடப்பட்ட கணக்கெடுப்பு படிவத்தை (இரட்டை பிரதியில்) வழங்குவார். வீட்டில் யார் இருந்தாலும், அந்த விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம். அந்த வீட்டில் இருக்கும் வாக்காளருக்கு அவருடைய உறவு முறையை அவர்கள் தெரிவிக்க வேண்டும். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பத்தைப் பெறுவதற்கு அந்த அலுவலர் மீண்டும் வருவார். வாக்காளர்கள் கணக்கெடுப்பு படிவத்தில் தேவையான விவரங்களை பூர்த்தி செய்து, கையொப்பமிட்டு மீண்டும் வழங்க வேண்டும். புதிய வண்ணப்புகைப்படத்தை அதற்கான இடத்தில் ஒட்டி வழங்கலாம். கணக்கெடுப்பு படிவத்துடன் ஆவணங்கள் எதும் வழங்க வேண்டியதில்லை. பெறப்பட்ட கணக்கெடுப்பு படிவங்களின் அடிப்படையில் வாக்காளர் பதிவு அலுவலரால் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அதனை தொடர்ந்து ஆட்சேபனைகள் மற்றும் கோரிக்கை காலத்தில் அதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்களால் முடிவு செய்யப்படும். மேலும், கணக்கெடுப்பு படிவத்தில் தவறாக தகவல் வழங்கிய அல்லது தகவல்கள் அளிக்காத வாக்காளர்களின் விண்ணப்பங்கள் மீது வாக்காளர் பதிவு அலுவலர் ஒரு அறிவிப்பு வழங்குவார். அதன்மீது வாக்காளர் அளிக்கும் ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை செய்து இறுதி ஆணைபிறப்பிப்பார். அதனை தொடர்ந்து இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்பதும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
எனவே பொதுமக்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சியினர் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணிக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க கேட்டுக் கொள்ளப்பட்டது. இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ், தெரிவித்தார்கள்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.கவிதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கவிதா, வருவாய் கோட்டாட்சியர்கள் காயத்ரி (தருமபுரி),.செம்மலை (அரூர்), உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

