தருமபுரி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் ஆய்வு
தருமபுரி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் 3 திட்டப்பணிகள் ரூ.13.25 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருவதை மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ், முன்னிலையில் இன்று (26.10.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளின் தரம் குறித்து கேட்டறிந்தார்கள்.
தருமபுரி மாவட்டம், தருமபுரி வட்டம், அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் ரூ.47.88 இலட்சம் மதிப்பீட்டில் 200 கல்லூரி மாணவர்கள் தங்கி பயிலும் வகையில் புதிய விடுதி கற்றல் கற்பித்தல் கூடம் கட்டப்பட்டு வருவதை மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, இவ்விடுதியில் தங்கி பயிலும் மாணவர்களிடம் குடிநீர், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்கள்.

இதனைத் தொடர்ந்து, தருமபுரி மாவட்டம், தருமபுரி நகரப்பகுதியில் ரூ.11.50 கோடி மதிப்பீட்டில் 250 கல்லூரி மாணவியர்கள் தங்கி பயிலும் வகையில் சமூகநீதி கல்லூரி மாணவியர் புதிய விடுதி கட்டடம் கட்டப்பட்டு வருவதை மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளின் தரம் குறித்து கேட்டறிந்து, இப்பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்து பயன்பாட்டிற்கு வழங்க அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். இவ்விடுதிக் கட்டடத்தின் தரைத் தளத்தில் 10 அறைகளும், முதல் தளத்தில் 16 அறைகளும் மற்றும் இரண்டாம் தளத்தில் 16 அறைகளும் என மொத்தம் 42 அறைகளுடன் மாணவியர்கள் தங்கும் அறை கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. மேலும் ஒரு அறைக்கு 6 மாணவியர்கள் தங்கும் வகையில் தனித்தனி கழிவறை மற்றும் குளியலறை வசதிகளும், அனைத்து அறைகளிலும் ஒவ்வொரு மாணவியருக்கும் தனித்தனி கட்டில் மற்றும் படிப்பதற்காக நாற்காலிகளுடன்கூடிய தனித்தனி மேஜைகள், உணவருந்தும் அறையில் 100 பேர் வரை அமர்ந்து உணவருந்தும் வகையில் மேஜைகளும், சமையலறை, பொருட்கள் வைப்பு அறை மற்றும் RO குடிநீர் வசதி, விடுதி காப்பாளர் அறை உள்ளிட்ட அறைகள் அமைக்கப்பட்டு வருகிறது.
மேலும், தொடர்ந்து, தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், வெள்ளாளப்பட்டி கிராமத்தில் அயோத்தி தாச பண்டிதர் குடியிருப்பு பகுதி மேம்பாடு திட்டம் மற்றும் நபார்டு வங்கி திட்டத்தின் கீழ் ரூ.127.49 இலட்சம் மதிப்பீட்டில் கிராம அறிவு மைய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளதை மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளின் தரம் குறித்து கேட்டறிந்தார்கள். இக்கிராம அறிவு மைய கட்டிடத்தின் தரைத்தளத்தில் 100 பேர் அமரும் வகையில் திறன் மேம்பாட்டுக்கூடம், திட்ட பொருட்காட்சி அறை, ஆண்கள் மற்றம் பெண்களுக்கான கழிவறை மற்றும் முதல் தளத்தில் 100 பேர் அமரும் வகையில் விவசாயிகள், சுயஉதவிக்குழுக்கள் பயன்பெறும் வகையில் பயிற்சி மையம், ஆலோசனை அறை மற்றும் கணினி அறை உள்ளிட்டஅறைகள்அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின் போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர்எஸ்.எஸ்.மகேஸ்வரன், மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் தேன்மொழி, மாவட்ட மேலாளர் தாட்கோ வி.ராமதாஸ், சேலம் தாட்கோ செயற்பொறியாளர் கண்ணன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் இந்நாள், முன்னாள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உடனிருந்தனர்.

