தருமபுரி அரசு மருத்துவமனையில் உணவின் தரம், அடிப்படை வசதிகள் குறித்து ஆட்சியர் ரெ. சதீஷ் ஆய்வு
அரசு தருமபுரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், எம்,ஆர்.ஐ. ஸ்கேன் மற்றும் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பிரிவு, உணவின் தரம் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர்ரெ.சதீஸ், இன்று (01.07.2025) ஆய்வு மேற்கொண்டார்.
மருத்துவமனையில் புற நோயாளிகள் பிரிவு, நோயாளிகள் பதிவு செய்யும் இடம், மற்றும் மருந்தகம் உள்ளிட்ட சிகிச்சை பிரிவுகளுக்கு சென்று ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நோயாளிகள் பதிவு செய்யும் பிரிவில் உள்ள கணினியில் நோயாளிகள் விவரம் குறித்து பதிவு செய்வது குறித்து பணியாளர்களிடம் கேட்டறிந்தார்.

இதனை தொடர்ந்து, தீவிர சிகிச்சை பிரிவு, அவசர கால பிரிவு, இயல்முறை சிகிச்சை பிரிவு, எலும்பு முறிவு சிகிச்சை பிரிவு, பொது மருத்துவம், பெண்கள் நலப்பிரிவு, மயக்கவியல் பிரிவு, குழந்தைகள் நலப்பிரிவு உள்ளிட்ட பிரிவுகளில் ஆய்வு செய்து, நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் பற்றி மருத்துவ அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
மேலும், உடலில் உள்ள உறுப்புகள் மற்றும் திசுக்களின் விரிவான படங்களை உருவாக்க உதவும் எம்,ஆர்.ஐ. ஸ்கேன் பிரிவு மற்றும் கர்ப்பிணி தாய்மார்களின் கரு வளர்ச்சி, கல்லீரல், சிறுநீரகம், பித்தப்பை, மண்ணீரல் போன்ற உறுப்புகளில் உள்ள பிரச்சனைகளைக் கண்டறிய உதவும் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பிரிவினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டு, ஸ்கேன் அறிக்கைகளை நோயாளிகளுக்கு உடனடியாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார்.

சிகிச்சை பெற வருபவர்களின் உதவியாளர்கள் காத்திருக்கும் இடத்தினை ஆய்வு செய்து, அவர்கள் அமர்வதற்கான உரிய ஏற்பாடுகளை மருத்துவனையில் ஏற்படுத்தி தர வேண்டும் எனவும், மருத்துவமனையினையும், வளாகத்தினையும் தூய்மையாக வைத்துகொள்ள வேண்டும் எனவும் மருத்துவர்களிடம் அறிவுத்தினார்.
புறநோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கும் முறைகள், மருத்துவமனைகளை தூய்மையாக பராமரித்தல் குறித்தும் குடிநீர், மின்சாரம், கழிவறை உள்ளிட்ட அடிப்படை தேவைகளை சரியான முறையில் வழங்க மருந்துவர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஷ் அறிவுரை வழங்கினார்.
மேலும் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு, உணவின் தரம் குறித்து கேட்டறிந்தார். மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் மருத்துவமனைக்கு வருகைத்தரும் நோயாளிகளை அன்பாகவும், ஆதரவாகவும் அரவணைத்து, அவர்களுக்கான உரிய சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது, அரசு தருமபுரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் (பொ) மரு.சிவக்குமார், உள்ளிருப்பு மருத்துவர் மரு.நாகேந்திரன், குழந்தை பிரிவு மருத்துவர்கள் மரு.ரமேஷ்பாபு, மரு.சந்திரசேகர், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் உடனிருந்தனர்.

