பள்ளிக் கல்வித்துறை சிறப்பாக இயங்கினால் எல்லாத் துறையும் சிறப்பாக இயங்கும். அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், அதியமான் கோட்டை, செந்தில் பப்ளிக் பள்ளியில் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் மாநில அளவிலான அடைவுத் தேர்வு – 2025 (SLAS) குறித்து மாவட்டத்தில் உள்ள பள்ளித் தலைமை ஆசிரியர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ்,முன்னிலையில் இன்று (27.06.2025) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்ததாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பள்ளி கல்வி துறைக்கென தனி கவனம் செலுத்தி மற்ற துறைகளை காட்டிலும் அதிக நிதி ஒதுக்கிடு தந்து பல்வேறு திட்டங்களை சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகின்றார்கள். தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக நான் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் இதுநாள் வரை சட்டமன்ற தொகுதியில் உள்ள பள்ளிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டு தகுந்த அறிவுரைகளை வழங்கி வருகின்றேன்.
பள்ளிக் கல்வித்துறை சிறப்பாக இயங்கினால் எல்லாத் துறையும் சிறப்பாக இயங்கும். சிறந்த மனித வளத்தைப் பள்ளிக்கல்வித்துறை தான் உருவாக்கிக் கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட உன்னத கடமை நமது ஆசிரியர்களுக்கு உண்டு. மேலும், தொடக்கநிலை கல்வியில் மாணவர்கள் அடைந்துள்ள கற்றல் அடைவினை அறிந்து கொள்வதற்காகவும், கல்வி செயல்திறனை மதிப்பிடுவதற்காகவும் தமிழ்நாட்டில் உள்ள 45,924 அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர் மற்றும் மேனிலைப் பள்ளிகளில் உள்ள சுமார் 9.80 இலட்சம் மாணவர்களுக்கு மாநில கற்றல் அடைவு ஆய்வு (SLAS) 3-ஆம், 5-ஆம் மற்றும் 8- ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதத்தில் நடைபெற்றது.
அந்தந்த வகுப்புகளில் மாணவர்கள் பெற்றிருக்க வேண்டிய அடைவு திறன், முழுமையான முறையில் மாணவர்கள் பெற்றுள்ளார்களா என சோதிப்பதற்காகவும். மாணவர்களின் கற்றலின் இடையே காணப்படும் இடைவெளியை நிரப்புவதற்காகவும். கற்றல் கற்பித்தலில் குறிப்பிட்ட இலக்கினை வரையறுப்பதற்காகவும், மாவட்டங்கள் இடையே மாணவர்கள் பெற்றுள்ள அடைவினை ஒப்பீடு செய்வதற்காகவும் இத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

மாநில கற்றல் அடைவு ஆய்வுகளில் தருமபுரி மாவட்ட செயல்திறன் மாநில சராசரியுடன் ஒப்பிடும்போது, 3-ஆம், 8 ஆம் வகுப்புகளில் மாநில சராசரிக்கு சமமாகவும், 5 ஆம் வகுப்புக்கான மாநில சராசரியுடன் ஒப்பிடும்போது குறைந்த மதிப்பெண் பெற்றுள்ளது. அனைத்து வகுப்புகளிலும் பெண் குழந்தைகளின் செயல்திறன் ஆண்களை விட சிறப்பாக உள்ளது
வட்ட அளவிலான செயல்திறனில் 3-ஆம், 5-ஆம் வகுப்பு மாணவர்கள் கணிதத்தை விட சுற்றுச்ச்சூழல் பாடத்தில் சிறந்து விளங்கினர். 8 ஆம் வகுப்பு மாணவர்கள் தமிழ் மற்றும் சமூக அறிவியலில் சிறந்து விளங்கினர். 3, 5- ஆம் வகுப்புகளில் வட்ட அளவிலான செயல்திறனில் பாலக்கோடு மற்றும் பென்னாகரம் பெரும்பாலும் அனைத்து பாடங்களிலும் வலுவான செயல்திறனைக் கொண்டுள்ளன. மேலும் 8 ஆம் வகுப்புக்கு எரியூர், நல்லம்பள்ளி மற்றும் பாலக்கோடு ஆகியவை தொடர்ந்து அதிக மதிப்பெண்களுடன் குறிப்பாக தமிழ் மற்றும் சமூக அறிவியலில் அதிக செயல்திறனை கொண்டுள்ளன.
பொதுவாக தருமபுரி மாவட்டத்தில் அனைத்து வட்டங்களிலும் பலவீனமான பாடம் மற்றும் எந்த வகுப்புகளும் மாநில சராசரியை விட சராசரி செயல்திறனைக் கொண்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தருமபுரி மாவட்டத்திற்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் உள்ள பள்ளி மாணவ, மாணவியர்களின் தற்போதைய கற்றல் நிலையைப் புரிந்துகொள்வதிலும் தேவையான மேம்பாடுகளை ஏற்படுத்துவதிலும் கற்றல் அடைவு ஆய்வுகள் (SLAS-2025) ஒரு முக்கியமான படியாகக் கருதப்படுகிறது. கல்வி முறைக்குள் கற்பித்தல் முறைகளை மேம்படுத்தவும், கல்வி வளங்களை மேம்படுத்தவும் இந்த கற்றல் அடைவு ஆய்வுகள் பயன்படுத்தப்படும். இத்தேர்வுகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பீடுகளைப் பொறுத்து இனிவரும் காலங்களில் பாடத்திட்டம் வடிவமைத்தல், கற்பித்தல் அணுகுமுறைகளை மாற்றி அமைத்தல், ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் ஆகியவை திட்டமிடப்பட உள்ளன. மேலும்,தொடக்க நிலை வகுப்பு மாணவர்களின் கற்றல் தேர்ச்சியிலும் அக்கறையோடு, ஆசிரியர்களின் பங்களிப்பு முழுமையாக இருக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசின் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள், பள்ளிக் கல்வித் துறையின் முனைப்பான செயல்பாடுகள் மற்றும் தருமபுரி மாவட்ட நிர்வாகத்தின் தொடர் முயற்சிகளாலும் அரசுப் பொதுத் தேர்வு முடிவுகளில் தருமபுரி மாவட்டம் மிகச் சிறப்பான இடத்தை பெற்றுள்ளது. இந்த இலக்கை எய்திட நடவடிக்கைகள் மேற்கொண்ட கல்வித்துறை அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
இந்த ஆய்வுக்கூட்டத்தில் இயக்குநர் (தொடக்ககல்வி) நரேஷ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஐ.ஜோதி சந்திரா, மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை கல்வி) மகாத்மா, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் டாக்டர்.ஜெயபிரகாஷ், உதவி திட்ட அலுவலர் .எம்.மஞ்சுளா, நேர்முக உதவியாளர்கள், அனைத்து வட்டார கல்வி அலுவலர்கள், அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

