பணி பாதுகாப்பு சட்டம் நிறைவேற்ற கோரி வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு தர்ணா போராட்டம்
7- அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் தருமபுரியில் தர்ணா மற்றும் பேரணி நடத்தினர்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும் நில அளவைத்துறையில் பணிபுரியும் அனைத்து நிலை அலுவலர்களுக்கும் உரிய பணிப்பாதுகாப்பு வழங்க வேண்டும். வருவாய்த்துறை அலுவலர்கள் தாக்கப்படும் பட்சத்தில், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க சிறப்பு பணிப்பாதுகாப்பு சட்டம் உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

பொதுமக்களுக்கு சிறந்த சேவையாற்ற, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையில் உள்ள அனைத்து காலிப்பணியிடங்களையும் விரைந்து நிரப்ப வேண்டும். வருவாய்த்துறை அலுவலர்களுக்கு, குறிப்பாக களப்பணியாளர்களுக்கு, அதிகப்படியான பணிச்சுமை மற்றும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் வகையில் போதிய கால அவகாசமின்றி இலக்குகள் நிர்ணயிக்கப்படுவதை தடுத்து, இதற்கான விரைவான தீர்வை வழங்க வேண்டும்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும் நில அளவைத்துறையில் உள்ள அனைத்து நிலை அலுவலர்களின் பணிச்சுமையை கருத்தில் கொண்டு, மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்க வேண்டும்.

பணியின் போது உயிரிழக்கும் அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கான கருணை அடிப்படை பணி நியமன உச்சவரம்பை 5 சதவீதத்திலிருந்து மீண்டும் 25 சதவீதமாக உயர்த்தி, கிராம உதவியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கல்வித்தகுதிக்கேற்ப உரிய பணியிடங்களை வழங்க வேண்டும். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையில் வெளிமுகமை தற்காலிக மற்றும் தொகுப்பூதிய நியமனங்களை முழுமையாககைவிட்டு, அனைத்து பணியிடங்களையும் நிரந்தர அடிப்படையில் நிரப்ப வேண்டும்.
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1 ஆம் தேதியை ‘வருவாய்த்துறை தினமாக’ அனுசரித்து அரசாணை வெளியிட வேண்டும். மேலும், வருவாய்த்துறை அலுவலர்களின் தன்னலமற்ற சேவையை அங்கீகரிக்கும் வகையில் மாநில அளவில் அரசு விழாக்கள் நடத்த வேண்டும். உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தருமபுரி அரசு கல்லூரி முன்பு துவங்கிய பேரணி தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தடைந்தது.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற தர்ணா போராட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சி. துரைவேல் தலைமை வகித்தார். வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் வெ. தனப்பால் வரவேற்றார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கு. அகிலன் அமிர்தராஜ், கே. வெங்கட்டேசன், ஆர். ரங்கன், ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் எம். சுருளி நாதன்,மாவட்ட செயலாளர் ஏ. தெய்வானை,தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் ச. இளங்குமரன், தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பின் மாநில தணைத்தலைவர் ஆர். வெங்கட்டேசன், வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் முன்னாள் மாநில தணைத்தலைவர் டியூக் பொன்ராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
கூட்டமைப்பின் மாநில பிரச்சார செயலாளர் கதிரவன், நில அளவை அலுவலர் ஒன்றிப்பின் மாநில செயலாளர் கல்பனா ஆகியோர் வாழ்த்தி பேசினார்.

