மொரப்பூர்-தருமபுரி ரயில்பாதை திட்டம்விரைவில் செயல்படுத்தப்படும் ஆட்சியர் ரெ. சதீஸ் ஆய்விற்க்குபின் தகவல்
தருமபுரி மாவட்டம், மொரப்பூர் – தருமபுரி புதிய அகல இரயில் பாதை அமைக்கும் திட்டத்திற்கு, நில எடுப்பு செய்யப்படுவதற்கான பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ் கள ஆய்வு மேற்கொண்டார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:
மொரப்பூர் – தருமபுரி புதிய அகல இரயில் பாதை திட்டத்தின் கீழ், அரசாணை 54 போக்குவரத்து (ஐ1) துறை நாள்: 17.04.2023-ன்படி, தருமபுரி மாவட்டத்தில் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் தருமபுரி ஆகிய மூன்று வட்டங்களில் 18 கிராமங்களில் பட்டா நிலங்கள் 78.54.56 ஹெக்டேர் (194 ஏக்கர்) நிலங்களை நிலஎடுப்பு செய்யவும், அரசு புறம்போக்கு நிலங்கள் 13.43.56 ஹெக்டேர் (33 ஏக்கர்) நிலங்களை நிலமாற்றம் செய்யவும் அரசின் நிர்வாக அனுமதி வழங்கி ஆணையிடப்பட்டுள்ளது.
மொத்த பட்டா நிலங்கள் 78.54.56 ஹெக்டேர் (194 ஏக்கர்) நிலங்களில் 54.14.54 (134 ஏக்கர்) ஹெக்டேர் நிலங்களுக்கு தமிழ்நாடு தொழிலியல் நோக்கங்களுக்கான நிலஎடுப்பு சட்டம் 1997-ன்படி, நிலஎடுப்பு சட்டப்பிரிவு 3(2) –ன் கீழான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, நிலஎடுப்பு சட்டபிரிவு 3(1)-ன் கீழான அறிவிக்கையும் 54.14.54 ஹெக்டேர் (134 ஏக்கர்) நிலங்களுக்கு பிரசுரமாகியுள்ளது.

மீதமுள்ள பட்டா நிலங்கள் 24.40.02 ஹெக்டேர் (60 ஏக்கர்) (1.மூக்கனுhர் 2. செட்டிக்கரை 3. அளே தருமபுரி 4. ஏ. ரெட்டிஅள்ளி) நிலங்கள் 4 கிராமங்களின் பொதுமக்களின் நலன் கருதி மாற்றுபாதை அமைக்க திருத்திய நில திட்ட அட்டவணை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணி மூன்று மாத்திற்குள் முடிக்கப்படும்.
அரசு புறம்போக்கு நிலங்கள் 13.43.56 ஹெக்டேர் (33 ஏக்கர்) நிலங்களில் 7.13.43 ஹெக்டேர் (18 ஏக்கர்) நிலங்களை கையகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மீதமுற்ற அரசு புறம்போக்கு நிலங்கள் 6.29.83 ஹெக்டேர் (15 ஏக்கா) நிலங்கள் மாற்றுபாதையின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே, தருமபுரி – மொரப்பூர் இரயில் பாதை திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ், தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வுகளின் போது மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.கவிதா, அரூர் வருவாய் கோட்டாட்சியர் சின்னுசாமி, வட்டாட்சியர்கள் சண்முகசுந்தரம், கலைச்செல்வி உட்பட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.

