மாரண்டள்ளியில், புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடை இயங்க தடை ,ரூ 25000 அபராதம்.
தருமபுரி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் மருத்துவர் ஏ.பானுசுஜாதா, பாலக்கோடு துணைக் காவல் கண்காணிப்பாளர் மனோகரன் மற்றும் மாரண்டள்ளி தேர்வு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் சசிகலா அவர்கள் ஏற்பாடு, ஆலோசனைப்படி காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால், மொரப்பூர் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் திருப்பதி, மாரண்டள்ளி காவல் நிலைய உதவி ஆய்வாளர் தணிகாசலம், மாரண்டள்ளி தேர்வு நிலை பேரூராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் தேன்மொழி , தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட குழுவினர் இணைந்து மாரண்டள்ளி பேருந்து நிலையம், வெளிச்சந்தை ரோடு, பஞ்சப்பள்ளி சாலை, ராயக்கோட்டை சாலை, நான்கு ரோடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மளிகை கடைகள், பெட்டி பீடா கடைகள், மொத்த விற்பனை நிலையங்களில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை குறித்து கடைகளில் ஆய்வு செய்தனர்.

ஆய்வில் பஞ்சப்பள்ளி சாலையில் கவுனுர் பிரிவு ரோடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் பீடா கடையில் சந்தேகத்தின் பேரில் சோதனை செய்ததில் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் ஹான்ஸ்,விமல்-வி1 புகையிலை உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மறைத்து வைத்திருந்ததை கண்டெடுத்து பறிமுதல் செய்யப்பட்டது. நியமன அலுவலர்க்கு தகவல் அளித்து அவர் உத்தரவின் பேரில், மேற்படி புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட கடை இயங்க 15 தினங்கள் தடை விதித்து உடனடி அபராதம் ரூபாய்.25000 விதிக்கப்பட்டு நோட்டீஸ் மற்றும் சலான் வழங்கி கடை அடைக்கப்பட்டது.

ஆய்வின் போது டீ கடைகளில் தேயிலை தரமும் பரிசோதிக்கப்பட்டது. பேருந்து நிலையத்தில் ஒரு டீ கடையில் தேயிலை பரிசோதித்ததில் தரமற்ற கலப்பட தேயிலை பறிமுதல் செய்து அழித்து உடனடி அபராதம் ரூபாய்.1000 விதிக்கப்பட்டது. மேலும் பேருந்து நிலையத்தில் பழ குளிர்பான ஒர் கடை மற்றும் நான்கு ரோடு பகுதியில் இரண்டு கடைகளில் காலாவதியான குளிர்பானங்கள் கண்டெடுத்து பறிமுதல் செய்து அங்கேயே அழிக்கப்பட்டது. காலாவதியான குளிர்பானங்கள், பறிமுதல் செய்யப்பட்ட மேற்படி விற்பனையாளர்கள் மூவர்க்கும், நியமன அலுவலர் மருத்துவர். பானுசுஜாதா உத்தரவுப்படி, உடனடி அபராதம் தலா ரூபாய் 1000 என மூன்று கடைகளுக்கு 3 ஆயிரம் அபராதம் கட்டிட சலான் வழங்கி, உரிய விதிமுறைகள், வழிமுறைகள் பின்பற்ற வலியுறுத்தி எச்சரிக்கை நோட்டீஸ் அளிக்கப்பட்டது.

