

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கான திட்டங்கள்
சென்னை
1. பொதுமக்களின் வசதிக்காகச் சென்னையில் மூன்றாவது இரயில் முனையம் உருவாக்கப்படும்.
2. பல ஆண்டுகளாகத் தாமதப்படுத்தப்பட்டுள்ள வேளச்சேரிக்கும் புனித தோமையார்மலை ரயில் நிலையத்திற்கும் இடையில் உள்ள இரயில்வே பணி விரைந்து முடிக்கப்படும்.
3. கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள ராஜாஜி நகர் மக்கள் பயன் பெறும் வகையில் வில்லிவாக்கம் ரயில் நிலையத்திலிருந்து தெற்குப் பக்கமாகச் செல்வதற்குச் சுரங்க நடைபாதை அமைக்கப்படும்
4. சென்னை கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து அம்பத்தூர் தொழிற்பேட்டை வரை மெட்ரோ ரயில் பாதைத் திட்டம் விரைந்து நிறைவேற்றப்படும்
5. விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து எண்ணூர் வரை மெட்ரோ ரயில் பாதை நீட்டித்து அமைக்கப்படும்.
6. திருவொற்றியூர் மக்களின் நீண்ட காலக் கோரிக்கையான திருவொற்றியூர் விம்கோ நகர் ரயில் நிலையத்தை ஒன்றிய அரசின் அம்ரித் பாரத் திட்டத்தின் மூலம் தரம் உயர்த்தி, வடக்கிலிருந்து வரும் அனைத்து ரயில்களும் விம்கோ நகரில் நின்று செல்ல ஏற்பாடு செய்யப்படும்.
7. மணலி சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள தொழிற்சாலை மாசுகளால் ஏற்படக்கூடிய நோய்களுக்கு இப்பகுதி பொதுமக்கள் ஆளாக்கப்படுகின்றனர். இப்பகுதியில் இ.எஸ்.ஐ மருத்துவமனை அமைப்பதற்கு ஆவன செய்யப்படும்.
திருவள்ளூர்
1. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டம் புழல் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள புள்ளையன் ஊராட்சி, செங்குன்றம் பேரூராட்சியை ஒட்டி தேசிய நெடுஞ்சாலை NH5 இல் அமைந்துள்ளது. அங்கு சாலையைக் கடக்க உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படும்.
2. பழவேற்காடு முதல் கடப்பாக்கம் இடையே மேம்பாலம் அமைத்துப் புதிய சாலை அமைக்கப்படும்.
காஞ்சிபுரம்
1. பூந்தமல்லி நெடுஞ்சாலை-தா.பி.சத்திரம் பகுதியில் போக்குவரத்து நெருக்கடி காரணமாக சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய சிரமத்தைப் போக்கும் வகையில் நடை மேம்பாலம் அமைக்கப்படும்.
2. திருப்பெரும்புதூர் முதல் கரைப்பேட்டை வரையிலான தேசிய நெடுஞ்சாலையை (NH 48 கி. மீ . 37,000 முதல் கி. மீ. 71.015 வரை) ஆறு வழிச் சாலைகளாக மாற்றும் திட்டப்பணி விரைந்து முடிக்கப்படும்.
3. சென்னை சென்ட்ரல் ரயில்வே முனையம் மற்றும் சென்னை எழும்பூர் ரயில்வே முனையத்தில் நிலவும் நடைமேடை பற்றாக்குறையை எதிர்கொள்ளும் வகையில், மாற்று வழித்தடமாக அரக்கோணத்தில் இருந்து செங்கல்பட்டிற்குக் காஞ்சிபுரம் வழியாகச் செல்லும் ரயில் பாதை இருவழிப் பாதையாக மாற்றப்படும்.
4 காஞ்சிபுரம் கிழக்கு ரயில்வே நிலையத்தில் செயல்படும் பலதரப்பட்ட சரக்குப் போக்குவரத்தும், ஆசியாவின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் சரக்கு முனையமாகச் செயல்படும் போக்குவரத்தும் மேலும் மேம்படுத்தப்படும்.
5. காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார மக்களின் பன்மடங்காகப் பெருகிவரும் பயணத் தேவையைக் கருத்தில் கொண்டு கூடுதல் மின்சார ரயில் சேவை வழங்க வலியுறுத்தப்படும்.
செங்கல்பட்டு
செங்கல்பட்டிலுள்ள ஒருங்கிணைந்த நோய்த் தடுப்புமருந்து உற்பத்தி வளாகத்தை மேம்படுத்தி, உற்பத்தியைத் தொடங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
வேலூர்
1. பரதராமி பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் விளையும் மாம்பழங்களைப் பயன்படுத்தி அப்பகுதியில் மாம்பழச்சாறு தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்படும்.
2. வேலூர் விமான நிலையம் விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.
ராணிப்பேட்டை
1. ஆற்காடு பகுதியில் அரசு கலைக் கல்லூரி அல்லது அரசு தொழில்நுட்பக் கல்லூரி அமைக்கப்படும்.
2. விளாப்பாக்கம் பேரூரில் கூட்டுறவு வங்கி அமைக்கப்படும்.
3 சேந்தமங்கலத்தில் இரயில் நிலையம் அமைக்கப்படும்.
4. நெமிலி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் கூட்டுக் குடிநீர் திட்டம் பத்தப்படும்.
5. நகரி முதல் திண்டிவனம் வரையிலான இரயில் பாதை அமைக்கும் பணிகள் விரைந்து முடிக்கப்படும்.
திருப்பத்தூர்
1. திருப்பதி-கோவை சென்னை இண்டர்சிடி எக்ஸ்பிரஸ் ரயில் திருப்பத்தூர் இரயில் நிலையத்தில் நின்று செல்ல ஆவன செய்யப்படும்.
2. வாணியம்பாடி நியூ டவுன் LC-81 ரயில்வே கேட்டிற்கு உயர் மட்ட மேம்பாலம் அமைக்கப்படும்.
3. ஈரோட்டில் இருந்து சேலம் சந்திப்பு வழியாக ஜோலார்பேட்டைக்கு இரண்டு பயணிகள் ரயில் இருவேறு நேரங்களில் புறப்படுகிறது. ஜோலார்பேட்டையில் நின்று விட்டு மீண்டும் ஈரோடு திரும்பி செல்லாமல் இந்த இரண்டு ரயில்களில் ஒன்றை ஜோலார்பேட்டையில் இருந்து திருப்பதிக்கும், மற்றொரு ரயிலை ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை சென்ட்ரல் வரையிலும் நீட்டித்து இயக்க ஆவன செய்யப்படும்.
கிருஷ்ணகிரி
1. வளர்ந்துவரும் தொழில் நகரமான ஓசூர் நகரில் ஒரு புதிய விமான நிலையம் அமைக்கப்படும்.
2. தமிழ்நாடு நுழைவாயில் ஜுஜுவாடி முதல் சிப்காட் 2 வரை பறக்கும் சாலைப் பாலம் அமைக்கப்படும்.
3. கிருஷ்ணகிரியில் இரயில் நிலையம் அமைக்கப்படும்.
4. ஜோலார்பேட்டை -ஒசூர் ரயில் சேவை கிருஷ்ணகிரி வழியாகத் தொடங்கப்படும்.
5. ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் விரிவுபடுத்தப்படும்.
6. ஒசூர்-கிருஷ்ணகிரி -சென்னை இரயில் சேவை தொடங்கப்படும்.
7. சிப்காட்டில் மானியத்துடன் கூடிய 50 ஏக்கர் நிலத்தை விசைத்தறி தொழில் வளர்ச்சிக்கு ஒதுக்கித் தர ஆவன செய்யப்படும்.
8. ஒசூரில் இருந்து பெங்களூருக்கு மெட்ரோ இரயில் சேவை தொடங்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
9. ஒசூர்-தளி சாலையில் இரயில் மேம்பாலம் அமைக்க ஆவன செய்யப்படும்.
தருமபுரி
மொரப்பூர் ரயில் நிலையத்தையும் தர்மபுரி ரயில் நிலையத்தையும் இணைக்கும் வகையில் புதிய அகல ரயில் பாதை அமைக்கப்படும்.
திருவண்ணாமலை
1. ஆரணி பகுதியில் ஒரு கூட்டுறவு சர்க்கரை ஆலை அமைக்கப்படும்.
2. ஆரணியில் நீண்ட காலமாகக் கிடப்பில் போடப்பட்டுள்ள திண்டிவனம் முதல் ஆரணி வழியிலான நகரி ரயில் பாதைத் திட்டம் விரைந்து முடிக்கப்படும்.
3. நெல், அரிசி வியாபாரிகளுக்கு ஊக்கம் தரும் வகையில் ஏற்றுமதி மையம் அமைக்கப்படும்.
4. பத்தாண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ள திருவண்ணாமலை- திருக்கோவிலூர்- மாம்பழப்பட்டு-விழுப்புரம் வழியாகச் சென்னை வரை சென்று கொண்டிருந்த தினசரி ரயில் பொது மக்களின் வசதி கருதி மீண்டும் இயக்கப்படும்.
5. திருவண்ணாமலை நகரம் ஆன்மீகம் மற்றும் விவசாயத்தைச் சார்ந்து அமைந்துள்ளதால் நகர வளர்ச்சிக்குத் தடையாக அமையவிருக்கும் புதிய
டோல்கேட் ரத்து செய்யப்படும்.
விழுப்புரம்
1. திண்டிவனம் முதல் நகரி வரையான புதிய ரயில் பாதைத் திட்டத்தில் ஆரணி நிலையத்தில் இருந்து ஒண்ணுபுரம் இணைப்புப் பாதையையும் காஞ்சிபுரம் முதல் செய்யாறு இணைப்புப் பாதையையும் சேர்க்க வழிவகை செய்யப்படும்.
2. விழுப்புரத்தில் இருந்து காட்பாடி இடையே இரு வழி ரயில் பாதை அமைக்கப்படும்.
3. உளுந்தூர்பேட்டை – விழுப்புரம் NH45 சாலையிலிருந்து பாதூர் கிராமத்திற்குச் செல்லும் வழியில் உள்ள ரயில் சாலையில் புதிய ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும்.
4. உளுந்தூர்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட நகர் பகுதி ரயில் நிலையத்தில் மக்களின் நீண்ட நாள் கோரிக்கைபடி ஒரு விரைவு ரயிலாவது நின்று செல்ல ஆவன செய்யப்படும்.
5. சென்னை-பாண்டிச்சேரிபேசஞ்சர் ரயில் விக்கிரவாண்டி ரயில் நிலையத்தில் நின்று செல்ல வகை செய்யப்படும்.
6. தேஜஸ் விரைவு ரயில் விழுப்புரத்தில் நின்று செல்ல ஆவன செய்யப்படும்.
7. வண்டி எண் 22671/22672, வண்டி எண் 56703/56704 விழுப்புரத்தில் இருந்து திருச்சி செல்லும் பாசஞ்சர் ரயில் மறு மார்க்கத்தில் விருதாச்சலம் வரை மட்டுமே இயக்கப்படுகிறது இதனை விழுப்புரம் வரை இயக்க ஆவன செய்யப்படும்.
கள்ளக்குறிச்சி
திருவெண்ணெய்நல்லூர் ரோடு ஆலங்குப்பம் ரயில்வே சுரங்கப் பாதையில் மழைக்காலத்தில் மழைநீர் தேங்கி நிற்காமல் இருக்க ரயில்வே சுரங்கப்பாதை. மேம்பாலமாக மாற்றி அமைக்கப்படும்.
சேலம்
1. சேலம் விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்படும். பன்னாட்டு விமான நிலையம் அமைக்க பரிசீலிக்கப்படும்.
2 சேலத்தில் 1000 ஏக்கர் பரப்பளவில் ஒரு புதிய தொழில்பூங்கா அமைக்கப்படும்.
3. சேலம் மாவட்டத்தில் ஜவுளி, ஜவ்வரிசி, நார் கயிறு, கொலுசு, விவசாயம் என பல துறைகளில் உற்பத்தி அதிக அளவில் செய்யப்படுகிறது. எனவே, அங்கு ஒருங்கிணைந்த திறன் மேம்பாட்டு மையம் அமைக்கப்படும்.
நாமக்கல்
1. ஈரோடு மாவட்ட பாகுரையும் நாமக்கல் மாவட்ட சோழிராமணியையும் இணைக்க ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும்.
2. நாமக்கல்லில் சிறப்பு முட்டை ஏற்றுமதி மையம் அமைக்கப்படும்.
ஈரோடு
1. ஈரோடு ரயில் நிலையம் முதல் காங்கேயம், தாராபுரம், பழனி ரயில் நிலையம் வரை புதிய அகல ரயில் பாதைத் திட்டம் நிறைவேற்றப்படும்.
2. ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் ஒன்றிய அரசின் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் அமைக்க ஆவன செய்யப்படும்.
திருப்பூர்
மக்காச்சோளம், சோயா போன்ற ஏராளமான விவசாயப் பொருள்கள் இந்திய இரயில்வே சரக்கு வண்டிகள் மூலம் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து நமது தமிழ்நாட்டிற்குக் கொண்டு வரப்படுகின்றன. இந்த முக்கிய இடுபொருள் தானியங்களின் விலையைக் குறைக்க கட்டணச் சலுகைகளை வழங்கிடப் பரிந்துரைக்கப்படும்.
நீலகிரி
1. நீலகிரி மாவட்டத்தில் முக்கியப் பொருளாதாரமான சிறு தேயிலை விவசாயிகளின் பச்சைத் தேயிலைக்குக் குறைந்தபட்ச விலையாக கிலோ ரூபாய் 35 ஆக நிர்ணயிக்கப்படும்.
2. நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்தலங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களுக்குச் செல்லும் வழித்தடங்கள் இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மூலம் மேம்படுத்தப்படும்.

கோவை
1. தமிழ்நாடு வியாபாரிகளுக்காக இரவு நேரங்களில் கோவையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இரயில் சேவை ஏற்படுத்தப்படும்.
2. பொள்ளாச்சி இளநீர் மற்றும் தேங்காய்க்கு GI Tag கொண்டுவரப்படும். பொள்ளாச்சியில் COLD STORAGE மையம் அமைக்கப்படும்.
3. பொள்ளாச்சி ரயில் நிலையம் புனரமைக்கப்படும்.
4. சேரன் விரைவு ரயில் சேவை பொள்ளாச்சி வரை நீட்டிக்கப்படும்.
5. கோவை மெட்ரோ ரயில் திட்ட சேவையைத் திருப்பூர் வரை நீட்டிக்க வழிவகை செய்யப்படும்.
6. மேட்டுப்பாளையம் சத்தியமங்கலம் கோபிசெட்டிபாளையம் ஈரோடு அகல ரயில்பாதைத் திட்டம் நிறைவேற்றப்படும்.
பெரம்பலூர்
ஆத்தூர் ரயில் நிலையம் முதல் பெரம்பலூர், அரியலூர் ரயில் நிலையம் வரை புதிய அகல ரயில் பாதை அமைக்க ஆவன செய்யப்படும்.
அரியலூர்
1. அரியலூர் முதல் சிதம்பரம் வரை ஜெயங்கொண்டம், காட்டுமன்னார்குடி வழியாகப் புதிதாக இரயில் பாதை அமைத்து இரயில் சேவை ஏற்படுத்தப்படும்.
2 அரியலூர் நகராட்சியில் அமைந்துள்ள இரயில் நிலையத்தில் விரைவு மற்றும் சிறப்பு இரயில்கள் நின்று செல்ல வழிவகை செய்யப்படும்.
திருச்சி
1. திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையை ரயில் பெட்டித் தொழிற்சாலையாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த பணியில் திருச்சி பி.எச்.இ.எல் நிறுவனமும் இணைந்து பணியாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
2 தேசிய நெடுஞ்சாலையில் பால்பண்ணை முதல் துவாக்குடி வரை உயர்மட்டச் சாலை அமைக்கப்டும்.
கடலூர்
1. முந்திரி ஏற்றுமதியாளர்களுக்கு, ஒன்றிய ஏற்றுமதி ஊக்கத்தொகை (ROTDEP) 5% மீண்டும் வழங்கிட ஏற்பாடு செய்யப்படும்.
2 பழைய முந்திரி மரங்களை அகற்றி, அதிக மகசூல் தரும் புதிய வகை முந்திரிக் கன்றுகளை மானியத்துடன் வழங்கிட ஆவன செய்யப்படும்.
3. பெண்ணாடம் ரயில் நிலையத்தைத் தரம் உயர்த்தி தென்பகுதி மற்றும் சென்னைக்குச் செல்லும் அனைத்து வகை ரயில்களும் நின்று செல்ல ஏற்பாடு செய்யப்படும்.
மயிலாடுதுறை
30 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட, மயிலாடுதுறை மற்றும் தரங்கம்பாடி புகைவண்டித் தடத்தை சீரமைத்து, காரைக்கால், நாகூர், வேளாங்கண்ணி, திருநள்ளாறு பயணிகள் பயணம் செய்ய ஏதுவாக அமைத்துத் தரப்படும்.
நாகப்பட்டினம்
நாகை துறைமுகத்தைச் சரக்குப் பெட்டகத் துறைமுகமாக மாற்றிட அல்லது வெள்ளப்பள்ளம் அருகே சரக்குப் பெட்டகத் துறைமுகம் அமைக்க ஆவன செய்யப்படும்.
தஞ்சாவூர்
1. பட்டுக்கோட்டை ரயில் வழித் தடத்தில் கம்பன் எக்ஸ்பிரஸ் ரயில் மீண்டும் இயக்கப்படும்.
2. பட்டுக்கோட்டை – மன்னார்குடி புதிய ரயில் பாதை அமைக்கப்படும், மேலும் ஒன்றிய அரசில் தி.மு.கழகம் பங்கேறிருந்த காலத்தில் தலைவர் கலைஞர் அவர்கள் வைத்த கோரிக்கையான பட்டுக்கோட்டை தஞ்சாவூ புதிய ரயில் பாதை அமைக்கப்படும்.
திருவாரூர்
திருவாரூரில் தேசிய வேளாண் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும். மற்றும் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பு தொடங்கப்பட ஆவன செய்யப்படும்.
புதுக்கோட்டை
தஞ்சாவூர்,கந்தர்வக்கோட்டை, புதுக்கோட்டை, திருப்பத்தூர்,வேலூர்,மது ரை வரை புதிய இரயில் பாதை அமைத்து புதுக்கோட்டை இரயில்வே நிலையம் புனரமைக்கப்படும்.
திண்டுக்கல்
1. திண்டுக்கல் – சபரிமலை இடையே இரயில் சேவை அமைக்க ஆராயப்படும்.
2. திண்டுக்கல்லில் இருந்து சென்னைக்குத் தனி ரயில் வசதி ஏற்படுத்திட பரிசீலிக்கப்படும்.
சிவகங்கை
காரைக்குடி முதல் நத்தம் வரை 4 வழிச் சாலை, (வழி சிங்கம்புணரி. கொட்டம்பாட்டி) அமைக்கப்படும்.
மதுரை
1. மதுரை திருப்பதி ரயில் மீண்டும் தொடங்குவதற்கான முயற்சிகளை முன்னெடுக்க ஒன்றிய அரசிடம் தி.மு.க. பரிந்துரைக்கும்.
2. மதுரையில் இருந்து போடி வரை செல்லும் ரயிலை லோயர் கேம்ப் வரை நீட்டிக்க ஆவன செய்யப்படும்.
3. மதுரை விமான நிலையம் சர்வதேசத் தரத்திற்கு உயர்த்தப்படும்.
4. மதுரையில் ஒன்றிய அரசின் தொழில் நிறுவனங்கள் அமைக்கப்படும்.
தேனி
1. பேபி அணையையும் முல்லைப் பெரியாறு அணையையும் பலப்படுத்த ஆவன செய்யப்படும்.
2. வாழை மற்றும் திராட்சை ஆகியவற்றிற்குத் மதிப்புக் கூட்டல் தொழிற்சாலைகள் அமைக்கப்படும்.

விருதுநகர்
1. காரியாபட்டி இரயில்வே நிலையம் அமைக்கப்படும்.
2. சிவகாசி பட்டாசுத் தொழிலைப் பாதுகாக்க சீனப் பட்டாசு இறக்குமதி தடை செய்யப்படும்.
இராமநாதபுரம்
1. இராமநாதபுரம் மாவட்டம் பிரப்பன்வலசை ரயில்வே வழித்தடத்தைக் கடக்க சாலை மேம்பாலம் அமைக்கப்படும்.
2. இராமேஸ்வரம் சென்னை, இராமேஸ்வரம் கன்னியாகுமரி இடையே சுற்றுலா கப்பல்/படகுப் போக்குவரத்துச் சேவை ஏற்படுத்தப்படும்.
தூத்துக்குடி
1. தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்குக் கப்பல் போக்குவரத்து ஏற்படுத்தித் தரும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
2. தூத்துக்குடி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாகத் தரம் உயர்த்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
3. முத்துநகர் விரைவு ரயில் சேவை போல், சென்னை செல்ல மேலும் ஒரு இரயில் சேவை ஏற்படுத்தப்படும்.
4. தூத்துக்குடி வி.எம்.எஸ் நகரில் ஐந்தாவது ரயில்வே கேட் மற்றும் மேம்பாலம் அமைக்கப்படும்.
5. நாசரேத் பகுதியில் கடந்த 21 ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்ட திருச்செந்தூர் கூட்டுறவு நூற்பாலை அமைந்திருந்த இடத்தில், பொதுமக்களும் சிறு, குறு வியாபாரிகளும் பயன்பெறும் வகையில் மாற்றுத்தொழிற்சாலை அமைத்து, இப்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவும், இங்குள்ள வணிகர்களின் வாழ்வாதாரத்தைக் காத்திடவும் ஆவன செய்யப்படும்.
6. நாசரேத்திலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் பிடாரனேரி கிராமத்தில் உள்ள சிட்கோ தொழிற்பேட்டை அமைந்துள்ள பகுதியில் புதிய தொழில் நிறுவனங்களை நிறுவி அப்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி, வாழ்வாதாரம் காத்திட ஆவன செய்யப்படும்.
7. காயல்பட்டினம் மற்றும் மீளவிட்டான் ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படும்
8. தூத்துக்குடியில் உற்பத்தியாகும் பனைபொருள்களுக்கு மதிப்பு கூட்டி ஏற்றுமதி செய்ய வழி வகை செய்யப்படும்.
திருநெல்வேலி
1. திருநெல்வேலியைத் தலைமை இடமாகக் கொண்டு திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி கன்னியாகுமரி மாவட்டங்களை உள்ளடக்கிய புதிய ரயில்வே கோட்டம் அமைக்க ஆவன செய்யப்படும்.
2. அம்பாசமுத்திரம், வி.கே.புரம் சாலையில் அம்பை ராணி பள்ளியின் அருகில் உள்ள ரயில்வே கேட்டில் உயர் மட்ட மேம்பாலம் அமைக்கப்படும்.
3. திருநெல்வேலிமாவட்டத்தில் உள்ள எட்டுகடற்கரை கிராமங்களிலும் தூண்டில் வளைவு இல்லாத கிராமங்களுக்குத் தூண்டில் வளைவு அமைக்கப்படும்.
தென்காசி மாவட்டம்
1. திருநெல்வேலி- சங்கரன்கோவில் ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில் ஆலங்குளம், சுரண்டை, சேர்ந்தமரம் வழியாகச் சங்கரன்கோவிலை இணைக்கும் புதிய ரயில்பாதை அமைக்கும் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும்.
2. கேரளா, கோவை மற்றும் சென்னை செல்லும் ரயில்கள் கடையம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வழிவகை செய்யப்படும்.
கன்னியாகுமரி
1. கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரை மற்றும் காவல்கிணறு முதல் நாகர்கோவில்வரை நான்குவழிச் சாலைக்காக நிலங்களை இழந்தவர்களுக்கு
இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க ஆவன செய்யப்படும்.
2. குமரி மாவட்டத்தில் கிடைக்கும் மீன்களைப் பதப்படுத்தி வெளி நாடுகளுக்கு
ஏற்றுமதி செய்யத் தகுந்த வகையில் நவீன தொழில்நுட்பத்துடன் மீன்
பதப்படுத்தும் நிலையம் உருவாக்கப்படும்.
விளவங்கோடு தொகுதியில் ரப்பர் தொழிற்சாலை அமைக்க ஆவன செய்யப்படும்.
4. ஏ.வி.எம் கால்வாயைச் சுத்தம் செய்து மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவர ஆவன செய்யப்படும்.
தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கும் இந்திய நாட்டின் வளர்ச்சிக்கும் உதவும் வண்ணம். இந்தத் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள திட்டங்களை எல்லாம் நிறைவேற்றிட, திமுக கூட்டணியில் போட்டியிட்டு, மக்களவை உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்படும் வேட்பாளர்கள் அனைவரும் தொடர்ந்து பாடுபடுவார்கள் என்று மக்களுக்குநாங்கள் உறுதிஅளிக்கிறோம்.
என்று திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள 2024 நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.

