தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற தட்சிணகாசி காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு இன்று நடைபெற்றது.

ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறையில் அஷ்டமி திதி அன்று பைரவ வழிபாடு செய்ய உகந்தது ஆகும். அந்நாள் பைரவாஷ்டமி என்று வழங்கப்படுகிறது. அதிலும் தேய்பிறை அஷ்டமி கால பைரவாஷ்டமி என்று வழங்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. இதையொட்டி அதிகாலை முதல் சாமிக்கு 108 வகை நறுமணப்பொருட்கள் மற்றும் பல்வேறு வகையான பழங்களால் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன.

இதைத்தொடர்ந்து சாமிக்கு 1,008 ஆகம பூஜைகளும், வேத பாராயணம் மற்றும் சிறப்பு அர்ச்சனையும் நடந்தது. பின்னர் சாமிக்கு உபகார பூஜைகளுடன் ராஜ அலங்கார சேவையும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இந்த சிறப்பு வழிபாட்டில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள், கர்நாடக மாநில பக்தர்கள் என திரளானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்கள் சாம்பல் பூசணியில் விளக்கேற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர்.


