பேருந்தில், மாட்டிறைச்சி எடுத்து சென்ற மூதாட்டியை இறக்கிவிட்ட விவகாரம் . நடத்துனர். ஓட்டுனர் மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு
தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த நவலை கிராமம், பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர் பாஞ்சாலை, (59) என்பவர் வாழ்வாதாரத்திற்காக நவலை பஸ்நிறுத்தம் அருகே நடைபாதையில் காய்கறி வியாபாரம் செய்துவருகிறார். மாலை நேரத்தில் மாட்டிறைச்சி பொரித்து விற்பனை செய்தும் வருகிறார்.

பாஞ்சாலை, செவ்வாய்க்கிழமை அரூரில் மாட்டிறைச்சியை வாங்கிக் கொண்டு பேருந்து நிலையத்திலிருந்து தனது கிராமமான நவலை வருவதற்கு அரூரில் இருந்து ஓசூர் செல்லும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்தில் (TN29 N3165 ) ஏறியுள்ளார். அவர் மூடியிடப்பட்ட தூக்குவாளி ஒன்றை கையில் வைத்திருந்திருக்கிறார். பேருந்து மோப்பிரிப்பட்டி வனப்பகுதியில் சென்றுகொண்டிருக்கும் போது பயணச்சீட்டு கொடுக்க வந்த நடத்துனர் ரகு, என்பவர் பாஞ்சாலையின் கையிலுள்ள தூக்குவாளியைப் பார்த்துவிட்டு நீ அந்த நவலைக்காரி தானே, தூக்குவாளியில் என்ன மாட்டுக்கறியா என்று கேட்டதாக சொல்லப்படுகிறது.
இவ்வளவு பயணிகள் இருக்க தன்னிடம் நடத்துனர் இவ்வாறு ஏன் கேட்கிறார் என்று அதிர்ச்சியடைந்த பாஞ்சாலை பதில் சொல்வதற்குள் நடத்துனர் விசிலடித்து பேருந்தை நிறுத்தியதாகவும்,
மாட்டுகறியை எடுத்துக்கொண்டு பேருந்தில் வரக்கூடாது என பலமுறை சொல்லியும் எதற்காக வந்தாய், நீயெல்லாம் ஒரு பொம்பளைய என்று கெட்ட வார்த்தையால் திட்டியதாகவும், பேருந்தின் டிரைவர் வண்டியை நிறுத்திவிட்டதாகவும், பாஞ்சாலை அடுத்துள்ள எட்டிப்பட்டி பேருந்து நிறுத்ததில் இறக்கிவிடுங்கள் என்று கெஞ்சியும், பேருந்தின் நடத்துனர் அனைத்து பயணிகள் மத்தியிலும் மாட்டுகறியை எடுத்துக்கொண்டு பேருந்தில் வரக்கூடாது என சொன்னால் நீ கேட்க மாட்டியா என்று நடத்துனர் சத்தம் போட்டதாக கூறப்படுகிறது.
அப்படி இறக்கி விடுவதாக இருந்தால் ஏதாவொரு பஸ் நிறுத்தத்தில் இறக்கிவிடுங்கள் என்று பாஞ்சாலை கெஞ்சிக்கேட்டதாகவும் ஆனால், அதற்கு உடன்படாத நடத்துனர் அந்த இடத்திலேயே இறக்கிவிட்டதாக சொல்லப்படுகிறது.
அவமானப்படுத்தி இறக்கிவிட்டதால் ஏற்பட்ட மனவுளைச்சலுடன் அங்கிருந்து மூன்று கிலோமீட்டர் தூரம் உச்சிவெயிலில் நடந்து வந்து அடுத்த பேருந்து நிறுத்தத்தில் பேருந்து பிடித்து பாஞ்சாலை ஊர் வந்து சேர்ந்ததாக சொல்லப்படுகிறது.
தனக்கு ஏற்பட்ட அவமானத்தை மகனிடம் மற்றும் உறவினர்களிடமும் பாஞ்சாலி தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர்கள் நேற்று இரவு பேருந்து ஓசூரிலிருந்து திரும்பி வருகையில் நவலையில் நின்றபோது, நடத்துனர் ரகுவிடம் வயதான பெண்ணை இப்படி இறக்கிவிட்டது நியாயமா என்று அவர்கள் கேட்டுள்ளனர். அதற்கு நான் ரூல்ஸ்படி இறக்கிவிட்டேன். உங்களால முடிஞ்சத பார்த்துக் கொள்ளுங்கள் என்று ஆணவமாக சொல்லிவிட்டு கிளம்பியதாக சொல்லப்படுகிறது.
இந்த புகாரின் பேரில், சம்பந்தப்பட்ட அரசு பேருந்தில் பணிபுரிந்த ஓட்டுநர் சசிகுமார், நடத்துனர் ரகு ஆகியோரை தற்காலிக பணிநீக்கம் செய்து, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் தருமபுரி மண்டல பொதுமேலாளர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இச்சம்பவம் குறித்து பாஞ்சாலை அரூர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததின் அடிப்படையில் அரசு பேருந்து நடத்துனர் சின்னாங்குப்பத்தை சேர்ந்த ரகு ,கே.ஈச்சம்பாடி கிராமத்தை சேர்ந்த ஓட்டுனர் சசிகுமார் ஆகியோர் எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்துள்ளனர்.
தலைமறைவான நடத்துனர் ஓட்டுநரை போலீசார் தேடிவருகின்றனர்.

