புதிய வாக்காளர், மகளிர் உறுப்பினராக சேர்க்கவேண்டும்- 2 கோடி உறுப்பினர் சேர்க்க இலக்கு :தமிழக வெற்றிக்கழகம்.

கட்சியின் உள்கட்டமைப்பை ஏற்படுத்துவது குறித்தும், தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை மற்றும் உட்கட்சிக் கட்டமைப்பு விரிவாக்கம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம், சென்னையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் கழகத் தலைவர் விஜையின்ஆலோசனையின்படி அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டது.
தமிழக வெற்றிக் கழகத்தின் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் உறுப்பினர் சேர்க்கை முகாம்கள் மாநிலம் முழுவதும் மாவட்ட மற்றும் சட்டமன்றத் தொகுதிகள் வாரியாக நடத்தப்பட வேண்டும்.
முதற்கட்டமாக மகளிர் தலைமையிலான உறுப்பினர் சேர்க்கை அணி நிர்வாகிகள் அறிவிக்கப்பட உள்ளனர். உறுப்பினர் சேர்க்கை அணியுடன் இணைந்து, புதியதாக நியமிக்கப்பட இருக்கும் மாவட்டப் பொறுப்பாளர்கள், சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்கள் ஆகியோர் முழு அளவில் உறுப்பினர் சேர்க்கைக்கான ஒருங்கிணைப்புப் பணிகளில் ஈடுபட வேண்டும்.
தமிழக வெற்றிக் கழகத்தால் நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டு வரும் சிறப்புச் செயலி வாயிலாக உறுப்பினர் சேர்க்கை முகாம்களை மாவட்ட, மாநகர, நகர, பேரூர், ஒன்றிய, ஊராட்சி. வார்டு வாரியாக முழுவீச்சில் நடத்தி, புதிய உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும். தலைவர் அவர்களின் ஆணையை ஏற்று, இரண்டு கோடி உறுப்பினர்கள் என்று இலக்கு நிர்ணயித்து, உறுப்பினர் சேர்க்கைப் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்துவது தான் நமது முதற்கட்டப் பணியாகும்.
புதிய வாக்காளர்கள் மற்றும் மகளிர் உள்ளிட்ட வாக்காளர்கள் அனைவரையும் தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினர்களாகச் சேர்க்கக் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
மாவட்ட, சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்களுக்கு விதிக்கப்படும் நிபந்தனைகள், கட்டுப்பாடுகளை ஏற்றுச் செயல்படுவதைக் கடமையாகக் கருத வேண்டும்.
தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரை அறிவித்து, தலைவர் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், நமது இலக்கு குறித்தும், அரசியல் நிலைப்பாடு குறித்தும் தெளிவாக விளக்கியுள்ளார்கள். அதனை மாவட்ட, சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்கள் அனைவரும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.
தமிழக வெற்றிக் கழகத்தின் பெயரில் போஸ்டர்கள். பிளக்ஸ் பேனர்கள் தயாரிக்கும் போதும். பயன்படுத்தும் போதும். கட்சித் தலைமையால் வழங்கப்படும் வழிகாட்டு நெறிமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
நமது கழகம் தொடர்பான அதிகாரப்பூர்வ நியமனங்கள். அறிவிப்புகள் அனைத்தும் கழகத் தலைவர் அவர்கள் அல்லது தலைவர் அவர்களின் ஒப்புதலுடன் பொதுச்செயலாளர் அவர்களால் கழகத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கங்களில் வெளியிடப்படும் என்பதை மாவட்ட, சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டும். அனைவரும ஒற்றுமையாகச் செயல்பட்டு நமது இலக்கான இரண்டு கோடி உறுப்பினர்கள் சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும்
என ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுத்துள்ளனர்.

