பிப்-24 – ல் முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா பிறந்தநாளில் கண், இரத்ததானம் செய்வீர்: எடப்பாடி கே.பழனிசாமி

அஇஅதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு பல்வேறு வகைகளில் வரலாற்றுச் சிறப்புகளைப் பெற்றுத் தந்து, மக்கள் நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்திட்ட ஜெ.ஜெயலலிதா அவர்களின் 76-ஆவது பிறந்த நாள் விழா : 24.2.2024 – சனிக்கிழமை எம்.ஜி.ஆர். அவர்களால் உருவாக்கப்பட்ட மாபெரும் மக்கள் பேரியக்கமான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை, ஜெயலலிதா அவர்கள் தமது வாழ்வின் உயிர் மூச்சாகக் கொண்டு, கழகத்திற்காகவே அர்ப்பணிக்கப்பட்டவராய் தவ வாழ்வு வாழ்ந்து, தமிழ் நாட்டின் நலனுக்காக தன்னையே அர்ப்பணித்து, “தனக்கென்று தனிப்பட்ட வாழ்வு இல்லை தனக்கென்று தனிப்பட்ட எதிர்பார்ப்புகள் ஏதும் இல்லை; தான் வாழ்வதே இந்த இயக்கத்திற்காகத் தான்; தமிழக மக்களுக்காகத் தான்” என்று ஒவ்வொரு நொடிப் பொழுதும் நம்முடைய இயக்கத்தைப் பற்றியும், மக்களைப் பற்றியும் சிந்தித்து, தமிழ் நாட்டு மக்களுக்காக இந்த இயக்கம் ஆற்ற வேண்டிய பணிகள் இன்னும் நிறைய இருக்கின்றன என்று வீரமுழக்கமிட்டு அரும்பணியாற்றியவர். இத்தகைய போற்றுதலுக்குரிய ஜெயலலிதா அவர்களின் 76-ஆவது பிறந்த நாளான 24.2.2024 சனிக் கிழமை காலை 10.30 மணிக்கு, சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலை, கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகை வளாகத்தில் அமைந்துள்ள,
ஜெயலலிதா அவர்களுடைய திருஉருவச்சிலைக்கு,
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தி, கழகக் கொடியினை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கி, “நமது புரட்சித் தலைவி அம்மா நாளிதழ்” சார்பில் தயார் செய்யப்பட்டுள்ள “புரட்சித் தலைவி அம்மா அவர்களின் 76-ஆவது பிறந்த நாள் விழா சிறப்பு மலரை” வெளியிட உள்ளார். அதனைத் தொடர்ந்து, தலைமைக் கழகச் செயலாளர்கள் மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளனர்.
ஜெயலலிதா அவர்களின் பிறந்த நாளான 24.2.2024 அன்று, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, கிளை, வார்டு மாநகராட்சிப் பகுதி, வட்ட அளவில் உள்ள கழக கொடிக் கம்பங்களுக்கு புதுவர்ணம் பூசியும் கொடிக் கம்பங்கள் இல்லாத இடங்களில் புதிய கொடிக் கம்பங்களை அமைத்து கழகக் கொடியினை ஏற்றி வைத்தும் தத்தமது பகுதிகளில் ஜெயலலிதா அவர்களுடைய திருஉருவச் சிலைகளுக்கும், அவரது படங்களுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்துமாறு கேட்டுக்கொள்வதோடு, கண் தானம், ரத்த தானம் செய்தல், மருத்துவ முகாம் நடத்துதல், கவிதைப் போட்டி, கட்டுரைப் போட்டி, விளையாட்டுப் போட்டிகளை நடத்தவேண்டும் என அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

