தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தலைமையில் நடைபெற்றது. இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுகொண்டு, மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தெரிவித்ததாவது:
இன்றைய தினம் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, பேருந்து வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டியும், பட்டா வேண்டுதல், சிட்டா பெயர் மாற்றம், புதிய குடும்ப அட்டை வேண்டுதல், வாரிசு சான்றிதழ், வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் ஓய்வூதியத் தொகை உள்ளிட்ட இதர உதவித் தொகைகள் உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகைகள், உதவி உபகரணங்கள் வேண்டியும் மொத்தம் 435 மனுக்கள் வரப்பெற்றன. பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும், சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, நடவடிக்கை மேற்கொண்டு தகுதியான மனுக்களுக்கு உரிய தீர்வினை உடனுக்குடன் வழங்கிட வேண்டுமெனவும், பொதுமக்கள் அளிக்கின்ற கோரிக்கை மனுக்கள் மீது துறை அலுவலர்கள் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு அதற்கான தீர்வினை விரைந்து காண வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
2023-2024 ஆம் கல்வி ஆண்டில் 11 ஆம் வகுப்பு பயிலும் மாணவ/ மாணவியர்களுக்கு நடத்தப்பட்ட தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வு தேர்வில் தருமபுரி மாவட்டத்தில் செயல்பட்டுவரும் அரசு செவித்திறன் பாதிக்கபட்டோருக்கான மேல்நிலைப்பள்ளியில் 11 ஆம் வகுப்பு பயின்று வரும் வாய் பேச இயலாத செவித்திறன் பாதிக்கப்பட்ட மாணவி செல்வி எஸ்.வெங்கடலஷ்மி என்பவர் நல்ல நிலையில் உள்ள மாணவ/ மாணவியர்களுக்கு இணையாக தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வு தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். மாநில அளவில் உள்ள அனைத்து அரசு சிறப்பு பள்ளிகளில் தருமபுரி மாவட்டத்தில் செயல்பட்ட வரும் சிறப்பு பள்ளியினை சேர்ந்த மாணவி எஸ்.வெங்கடலஷ்மி மட்டுமே தேர்சி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடதக்கது. அம்மாணவியை ஊக்கப்படுத்தும் விதமாக மாவட்ட ஆட்சியர் அவர்களின் விருப்ப நிதியிலிருந்து ரூ.25,000/- க்கான தேசிய சேமிப்பு பத்திரம், ஆட்சியர் வழங்கினார்.
இந்நிகழ்வுகளின் போது குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செ. பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், தனித்துணை ஆட்சியர் (சபாதி) சையது ஹமீத், ஆதிதிராவிடர் நல அலுவலர் சாகுல் அமீத், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சையது முகைதீன் இப்ராகிம், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செண்பகவள்ளி உள்ளிட்ட பல்வேறு துறைசார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

