பழங்குடி மக்களிடமிருந்து வரலாற்று உண்மைகளை கற்றுள்ளோம். ஆர்.பாலகிருஷ்ணன் இஆப ஓய்வு
தரவுகளால் வரலாறு கட்டமைக்கப்பட வேண்டும் என்று ஒடிசா மாநில முதல்வர் அலுவலக தலைமை ஆலோசகரும், ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரியுமான ஆர். பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தகடூர் அதியமான் வரலாற்று பேரவை, தகடூர் புத்தக பேரவை மற்றும் தருமபுரி அரசு கலைக் கல்லூரி வரலாறு துறை இணைந்து “ஒரு பண்பாட்டின் பயணம் – சிந்து முதல் வைகை வரை” என்ற நூல் ஆய்வு கருத்தரங்கத்தை தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில் நடத்தியது.

இக்கருத்தரங்கிற்கு தகடூர் புத்தக பேரவை தலைவர் மருத்துவர் இரா.செந்தில் தலைமை வகித்தார்.
தொல்லியல் இயக்குநர் ஓய்வு முனைவர் தீ.சுப்பிரமணியன் நோக்கவுரையாற்றினார்,

கருத்தரங்கில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் மாநில நிர்வாகி ச.தமிழ்செல்வன்,தென்மண்டல கோயில் ஆய்வுத் திட்டம் தொல்லியல் கண்காணிப்பாளர் கி. அமர்நாத் ராமகிருஷ்ணா, முத்தையா நூலக ஆராய்ச்சி இயக்குநர் முனைவர் சுந்தர் கணேசன்,சென்னை கிறித்துவக் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் ஜெ.சுடர்விழி ஆகியோர் கருத்துறையாற்றினர்.

இந்த கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஒடிசா மாநில முதல்வர் அலுவலக தலைமை ஆலோசகரும், ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரியுமான ஆர் பாலகிருஷ்ணன் பேசியதாவது:
“மனித குல வரலாறு என்பது பயணங்களால் கட்டமைக்கப்படுகிறது. பயணங்களுக்கு வெளியில் வரலாறு என்ற ஒன்று இல்லை. மனித வரலாறு என்பது பயணங்களின் கூட்டுத்தொகை. தரவுகளால் வரலாறு கட்டமைக்கப்பட வேண்டும். இல்லையென்றால் கட்டுக்கதைகளால் வரலாறு கட்டமைக்கப்படும். தரவுகளால் கட்டமைக்கப்படும் வரலாறு முடிவு பெறாமல் தொடர்ந்து பல்வேறு தேடல்களை தேடிக்கொண்டே இருக்கும். பழங்குடி மக்களிடமிருந்து பல்வேறு தகவல்களை அறிந்து வருகிறோம். அவர்களிடமிருந்து வரலாற்று உண்மைகளை நாம் கற்றுள்ளோம். வரலாறு தேடல்களின் காரணமாகத்தான் இன்று கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து நாம் அறிய முடிந்தது” என தெரிவித்தார். இக்கருதங்கில் வரலாற்று ஆய்வாளர்கள் ,எழுத்தாளர்கள்,அரசு மற்றும் தனியார் கல்லூரியை சேர்ந்த 500 மாணவ மாணவியர்கள் பங்கேற்றனர். இறுதியாக தருமபுரி அரசு கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர் முனைவர் சி.சந்திரசேகர் நன்றி கூறினார்.

