நூற்றாண்டைக் கடந்த கோவை டிலைட் திரையரங்கம் இடிப்பு 
வணிக வளாகமாக மாறுகிறது
1914 ம் ஆண்டில் கட்டப்பட்ட தென்னிந்தியாவின் முதல் தியேட்டர்
தென்னிந்தியாவில் முதன்முதலில் கோவையில் தான் ஸ்டுடியோக்களும், சினிமா தியேட்டர்களும் உருவாக்கப்பட்டன. அப்படி தென்னிந்தியாவில் முதன் முதலாக உருவாக்கப்பட்ட சினிமா தியேட்டர் தான் வெரைட்டி ஹால் என்றழைக்கப்படும் இன்றைய டிலைட் திரையரங்கம். கடந்த 1914ஆம் அண்டு இந்த திரையரங்கம் சாமிக்கண்ணு வின்சென்ட் என்பவரால் கட்டப்பட்டு முதன் முதலில் வள்ளித் திருமணம் படம் திரையிடப்பட்டது. இதுதான் தென்னிந்தியாவில் கட்டப்பட்ட நிரந்தரமான முதல் திரையரங்கம் ஆகும். இன்றளவும் இந்த திரையரங்கம் அமைந்துள்ள சாலை வெரைட்டி ஹால் சாலை என்று அழைக்கப்படுகிறது. அந்த காலகட்டத்தில் கோவையில் மின்சாரம் இல்லாத நிலையில் மக்கள் மண்ணெண்ணெய் விளக்குகளை தான் பயன்படுத்தி வந்தார்கள். அப்போது கோவையில் செயல்பட்ட முக்கிய கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு மட்டும் உதகை அருகே உள்ள பைக்காரா நீர்தேக்கத்தில் தயாரிக்கப்படும் மின்சாரத்தை பிரிட்டிச அரசாங்கம் வழங்கி வந்தது. அப்போது வின்சன்ட் சாமிக்கண்ணு வெளிநாட்டில் இருந்து ஒரு ஆயில் இஞ்சினை தருவித்து அதன் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்து திரையரங்கை இயக்கினார். அந்த மின்சாரத்தை கொண்டு திரையரங்கம் இருந்த சாலை முழுவதும் மின்விளக்குகளை ஒளிர செய்தார்.

பிரிட்டிஷ் இந்தியாவின் ரயில்வே துறையில் வரைகலை நிபுணராக வின்சன்ட் சாமி கண்ணு பணியாற்றி வந்தபோது பிரான்ஸ் நாட்டை சேர்ந்த தனது நண்பர் சொந்த ஊருக்கு செல்ல பண உதவி செய்துள்ளார். அதற்கு கைமாறாக அவர் தன்னிடம் இருந்த பிலிம் ப்ரொஜெக்டர் கருவியுடன் சில படச்சுருள்களையும் கொடுத்துவிட்டு சென்றார். அந்த ஃபிலிம் ப்ரொஜெக்டர் மூலம் பொதுமக்கள் கூடும் இடங்களில் திரை கட்டி படங்களை திரையிட்டு வந்தார். இதில் நல்ல வருவாய் கிடைக்க கோவை ரயில் நிலையம் பின்புறம் திரையரங்கை நிறுவினார். இப்படித்தான் கோவைக்கு முதல் நிரந்தர திரையரங்கம் வந்தது. 1950 ஆம் ஆண்டு இந்தத் திரையரங்கு வேறொரு நபருக்கு விற்கப்பட்ட நிலையில் வெரைட்டி ஹால் என்ற பெயர் டிலைட் திரையரங்க என மாற்றம் செய்யப்பட்டது.

இந்த தியேட்டரில்முக்கிய திரைநட்சத்திரங்களின் படம் வெளியாகும்
எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், அமிதாப்பச்சன் என திரை ஜாம்பவான்களின் தமிழ், இந்தி என பல்வேறு மொழி திரைப்படங்கள் டிலைட் திரையரங்கில் வெளியிடப்பட்டு வெற்றி விழா கொண்டாடப்பட்டன.
கோவையின் வரலாற்றுச் சின்னமான இந்த திரையரங்கம் ஒரு நுாற்றாண்டை கடந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு புதுப்பிக்கப்பட்டு, டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் எம்.ஜி.ஆரின் நினைத்ததை முடிப்பவன் திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது.

டிஜிட்டல் தொழில்நுட்பம் காரணமாக பழைய தியேட்டர்கள் மண்டபங்களாக மாறுகிறது
தமிழகத்தில், ஒரு நுாற்றாண்டு காலம் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்று இருந்த திரையரங்குகள், டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியாலும் நவீன வசதிகளாலும் இன்றைய மல்டிபிளக்ஸ் திரையரங்குகளுடன் போட்டியிட முடியாமல் திருமண மண்டபங்களாகவும், வணிக வளாகங்களாகவும் உருமாறிவிட்ட நிலையில், டிலைட் திரையரங்கமும் இதிலிருந்து தப்பவில்லை. கடந்த ஆண்டு ஜூலை மாதம் படங்கள் திரையிடுவதை நிறுத்திக் கொண்ட இந்த திரையரங்கம், வணிக வளாகம் கட்டுவதற்காக இடிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. என்பது குறிப்பிடதக்கது.

