இன்றைய நவீன வாழ்க்கை முறை, உடல் பருமன் என்பதைப் ஒரு பொதுவான பிரச்னையாக மாற்றிவிட்டது. எடை குறைப்பு பிரச்னை பலரும் எதிர்கொள்கின்ற மிகப்பெரிய சவாலாக இருந்து வருகிறது. இதற்காக பெரிதும் செலவழித்தும் பயன் இல்லாமல் போகிறது என்கிற ஆதங்கம் பொதுவாகவே அனைவருக்கும் உண்டு. அப்படி கடும் போராட்டத்தை முன்னெடுத்து உடல் எடையைக் குறைப்பதைப் பெரும் சவாலாகக் கருதுகிறோம். ஆனால், அதைவிட முக்கியம் சிரமப்பட்டு குறைத்த உடல் எடையை அப்படியே பராமரிப்பதுதான் சவால் நிறைந்த ஒன்று. எப்படிப்பட்ட வழிமுறையைப் பின்பற்றி உடல் பருமனை குறைத்திருந்தாலும், எடை மீண்டும் கூடிவிடாமல் பார்த்துக்கொள்வதே மிகப்பெரிய சவாலாக இருக்கும்.

உடல் எடையைக் குறைக்க நாம் பின்பற்றும் உணவுமுறை மாற்றங்களாலையே, எடை குறைத்த பிறகும் தொடர்ந்து நிர்வகிப்பது கடினமாக இருப்பதும், நம் உடல் பருமன் மீண்டும் கூடுவதற்கு ஒரு காரணமாக உள்ளது.
குறிப்பாக, குறைந்த கலோரி உள்ள உணவுகளை அதிகம் உட்கொள்வது அல்லது அன்றாட உணவுகளையே ஒட்டுமொத்தமாக தவிர்ப்பது போன்ற நடவடிக்கைகளால் உடல் எடை மீண்டும் கூடுவதற்கு காரணமாகி விடுகின்றன. மூன்றாவதாக, உடல் எடையைக் குறைப்பது ஒருவரின் பசியைத் தூண்டும் ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரிக்க வழிவகுக்கக் கூடும். அத்துடன், அதுவே அவரின் வளர்சிதை மாற்றத்தின் வேகத்தைக் குறைக்கவும் செய்து விடுகிறது. உடல்ரீதியான இந்த மாற்றங்களின் விளைவாக, அதிகப்படியான உணவை எடுத்துக் கொள்வது தவிர்க்க முடியாமல் போவதால், நாளடைவில் ஒருவரின் இழந்த உடல் எடை மீண்டும் கூடி விடுகிறது. உடல் எடை மீண்டும் அதிகரிப்பது நமக்கு பொதுவான அனுபவமாக இருந்து வருகிறது. ஆனாலும், நீண்டகால இடைவெளியில் உடல் பருமன் மீண்டும் கூடுவதைத் தடுக்கும் பல்வேறு வழிமுறைகளும் இருக்கத்தான் செய்கின்றன.

அந்த 5 வழிகள்
வார இறுதி நாட்களில் நீங்கள் அதிகமான அளவு உணவு வகைகளை உட்கொண்டால் உடல் எடை மேலாண்மையில் எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருப்பதற்கு, அடுத்த வாரம் வழக்கத்தைவிட கூடுதலாக நடைபயிற்சியை மேற்கொள்ளுங்கள்.
பெரிய விருந்து நிகழ்வுகளுக்குச் செல்லும்போது, அங்கு குறைந்த கலோரிகள் கொண்ட காய்கறி உணவு வகைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும்.

தங்கள் உடல் எடையை சீராகப் பராமரிக்க நினைப்போருக்கு, நடைபயிற்சி, மிதிவண்டி ஓட்டுவது போன்ற உடல்ரீதியான செயல்பாடுகள் மிகவும் முக்கியக் காரணியாக உள்ளது.
தங்கள் உடல் எடையை சீராகப் பராமரிப்பவர்களில் கிட்டத்தட்ட 97 சதவீதம் பேர், தினமும் காலை உணவைத் தவிர்க்காமல் எடுத்துக் கொள்பவர்களாக உள்ளனர். அதனால் எக்காரணத்தைக் கொண்டும் காலை உணவை தவறவிட வேண்டாம்.
இதேபோன்று ஓட்ஸ், தானிய ரொட்டிகள், பழுப்பு அரிசி, காய்கறிகள், கீரை வகைகள் என நார்ச்சத்து அதிகமுள்ள உணவு வகைகளை அன்றாடம் உட்கொள்பவர்களுக்கு மீண்டும் எடை கூடும் வாயப்பு குறைவு எனலாம். இதுபோன்ற அன்றாட செயல்களை தவற விடுவோருக்கு உடல் எடை ஏற்றம் கட்டாயம் நிகழ்கிறது. மேலும் உடல் எடை குறைப்பின்போதும் அதற்கு பின்னும் துரித உணவுகளை எடுத்துக்கொள்வதல் உடல் ஏற்றம் நகழ்கிறது. தினமும் உடற்பயிற்சி மேற்கொண்டாலே இதிலிருந்து நாம் தப்பிக்கலாம்.

