முதல் திரைப்படம்
பாரிஸ் நகரில் 1895-ம் ஆண்டு லூமியர் சகோதரர்களால் கிராண்ட்கபே எனும் ஹோட்டலின் கீழ்தளத்தில் முதல் திரைப்படம் திரையிடப்பட்டது.
அதன் பிறகு ஜூலை 1896-ம் ஆண்டில் அதேபோல் பம்பாயில் முதலில் திரைப்படம் திரையிடப்பட்டது. இவ்வாறு படிப்படியாக வந்து இந்தியாவில் 1907-ம் ஆண்டு முதல் காட்சி படமாக்கப்பட்டது
இந்திய சினிமா தோன்றிய 100 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இந்தியத்திரைப்படத்துறை உலகிலேயே அதிகளவில் திரைப்படங்கள் வெளியிடும் திரைத்துறைகளில் முதல் இடத்தில் உள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், போஜ்புரி, வங்காள மொழி ஆகிய மொழிகளில் பெரும் திரைப்படத்துறைகள் செயல்படுகின்றன. இந்தியாவில் திரைப்படத்துறை மிகவும் பிரபலமாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 1800 க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் இந்திய மொழிகள்களில் தயாரிக்கப்படுகின்றன. சென்னை, கொல்கத்தா, ஐதராபாத்து, மும்பை, திருவனந்தபுரம், பெங்களூரு, புவனேஸ்வர் , கவுகாத்தி. போன்ற நகரங்கள் இந்தியத் திரைப்பட உற்பத்திக்கு மிக முக்கியமாக விளங்குகின்றது.
இந்திய சினிமாவின் முதல் படம்
இந்தியாவில் திரைப்படம் 1896 ஆம் ஆண்டு ஜூலை 7 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. லுமியர் பிரதர்ஸ் சினிமட்டோகிரபி என்னும் நிறுவனம் பம்பாயில் இருந்த வாட்சன் விடுதியில் ஆறு சிறிய ஊமைப் படங்களைத் திரையிட்டது. அதே ஆண்டில் மதராஸ் நிழற்பட நிலையம் அசையும் நிழற்படங்கள் பற்றி விளம்பரப்படுத்தியது. 1897 ஆம் ஆண்டளவில் பம்பாயில் கிளிஃப்டன் அண்ட் கோ நிறுவனம் தனது மீடோஸ் தெரு நிழற்படக் கலையகத்தில் அன்றாடம் திரைப்படங்களைத் திரையிடத் தொடங்கியது.
முதல் இந்தியத் திரைப்படமாக தாதாசாஹேப் பால்கே என்பவரின் இயக்கத்தில் வெளியான “ராஜா ஹரிஷ்சந்திரா,”என்ற திரைப்படம்1913ம் ஆண்டு மே 3 ம் தேதி வெளிவந்ததாக பரவலாகக் கருதப்படுகிறது,”ராஜா ஹரிஷ்சந்திரா” இந்திய சினிமாவில் ஒரு திருப்புமுனையாகவும், நாட்டின் திரைப்படத் துறையின் பிறப்பாகவும் கருதப்படுகிறது.

தமிழ் சினிமா
இந்தியாவில் இந்தி திரைத்துறைக்கு அடுத்து பரவலாக அறியப்படும் திரைத்துறை ஆகும். 1980கள் வரை சென்னையில் கோடம்பாக்கத்தில் இருந்த திரைப்படத் தயாரிப்பு வசதிகளை முன்னிட்டு பெரும்பாலான மலையாளம், தெலுங்கு மொழித் திரைப்படங்களும் இங்கிருந்தே தயாரிக்கப்பட்டன. இதனால் தமிழ்த் திரைப்படத் துறை கோலிவுட் எனவும் அழைக்கப்படுகிறது. முதல் தமிழ் ஊமைத் திரைப்படம் 1918 ஆம் ஆண்டில் இயக்குநர் ஆர். நடராஜ முதலியார் என்பவர் இயக்கிய கீசக வதம் என்ற திரைப்படம் ஆகும். முதல் பேசும் படமான காளிதாஸ் என்ற திரைப்படம் 1931 ஆம் ஆண்டில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியானது. இந்த திரைப்படத்தை எச். எம். ரெட்டி என்பவர் இயக்கியுள்ளார். 1897-ல் எம்.எட்வர்டு என்பவர் சென்னை விக்டோரியா ஹாலில் முதல் சினிமா காட்சியைக் காண்பித்தார். அதன்பின்னர் 1900-ல் சென்னை மவுன்ட் ரோட்டில் (இன்றைய அண்ணா சாலையில்) மேஜர் வார்விக் என்பவரால் எலக்ட்ரிக் தியேட்டர் எனும் சினிமா அரங்கம் கட்டப்பட்டது. இது தென்னிந்தியாவின் முதல் சினிமா திரையரங்கம்.

சாமிக்கண்ணு வின்சென்ட் சென்னையில் 1905-ல் முதல் டூரிங் சினிமா கொட்டகையை உருவாக்கினார். அவர் தனது சினிமா கொட்டகையுடன் பல இடங்களுக்கும் பயணம் செய்து ‘குழந்தை ஏசு’ போன்ற குறும்படங்களைக் காட்டினார். 1911-ல் மருதப்ப மூப்பனார் ஐந்தாம் ஜார்ஜ் முடிசூட்டுவிழாவைப் படம்பிடித்து சென்னையில் திரையிட்டார். 1914-ல் ஆர்.வெங்கையா கட்டிய கெயிட்டி தியேட்டர்தான் இந்தியர் ஒருவரால் கட்டப்பட்ட முதல் சினிமா கொட்டகை.
எஸ்.எம்.தர்மலிங்கத்துடன் இணைந்து நடராஜ முதலியார் 1916-ல் சென்னையில் ஒரு சினிமா கம்பெனியைத் தொடங்கினார். 1917-ல் நடராஜ முதலியார் ‘கீசக வதம்’ எனும் மௌனப் படத்தை வெளியிட்டார். 1921-ல் சென்னையின் ஈஸ்ட் ஃபிலிம்ஸ் கம்பெனி நட்சத்திரங்களான ஆர்.வெங்கையா, ஆர்.பிரகாஷ் ஆகியோரின் தயாரிப்பில் உருவான ‘பீஷ்ம பிரதிக்ஞை’ படம்தான் தென்னிந்தியாவின் முதல் முழு நீளப் பேசாத் திரைப்படம். மக்கள் அறிந்துவைத்திருந்த புராணக் கதைகள், கர்ண பரம்பரைக் கதைகளை மெளனப்பட யுகத்தில் படங்களாக்கினர். 1944-ல் வெளியான ‘ஹரிதாஸ்‘ திரைப்படம் தமிழின் முதல் முழு நீள வண்ணப் படம். இந்தக் காலகட்டத்திலும் புராணம், இதிகாசக் கதைகளே திரைப்படமாக எடுக்கப்பட்டன. பாடல் பாதி, வசனம் பாதி என திரைப்படம் இருந்தது. 1934-ல் வெளியான ’சீதா கல்யாணம்’ தமிழ் சினிமாவின் முதல் வண்ணத் திரைப்படம் எனப்படுகிறது.
1931 ஆம் ஆண்டு ‘காளிதாஸ்’ திரைப்படம் தான் தமிழின் முதல் பேசும் திரைப்படம் ஆகும். 1930 -1940 முதல் பேசும்படம் வரத் தொடங்கிய காலக் கட்டம் அது. புராண கதைகளைத் திரையிடலில் காட்சிப்படுத்தப்பட்டது . கருப்பு , வெள்ளையில் திரைப்படங்களைப் பார்த்து கொண்டிருந்த ரசிகர்களுக்கு 1944 ஆம் ஆண்டு வெளியான , ‘ ஹரிதாஸ் ‘ திரைப்படம் முழு நீள கலர் படமாக வந்தது. புராணக் கதைகளை , இதிகாசக் கதைகளைப் பாடல், வசனம் என திரைப்படங்களாக வந்தன. 1960 -1970 களில் தான் தமிழ் சினிமா மிகப்பெரிய மாற்றத்தைக் கண்டு பரிமாண வளர்ச்சி பெற்றது என்றே சொல்லலாம். அதுவரை வெறும் வசனம், நடிப்பு என்று இருந்த சினிமாவில் இசை,நடனம்,சண்டைக் காட்சிகள் என பல உத்திகளைக் கையாளத் தொடங்கினர். அத்தோடு பல புது கதை அம்சங்களும் உருவாகியது. 1970-1980 இசை மற்றும் காட்சி அமைப்பிலும் பல மாற்றங்கள் வந்தன. குறிப்பாக இசை தகடு வந்த காலம் அது.
1975-க்குப் பிறகு கறுப்பு வெள்ளைப் படங்களின் எண்ணிக்கை குறைந்தது. ‘அவர்கள்'(1977) கறுப்பு வெள்ளை தமிழ் படங்களில் வெற்றி பெற்ற படம். 1980-களில் கறுப்பு வெள்ளை படங்களை தயாரிப்பது அரிதானது. 1980 – 1990
சினிமா ரசிகர்கள் கூட்டம் பொழுது போக்கிற்காக அலைமோத தொடங்கியதும் , வெறும் பொழுதுபோக்கு மட்டுமில்லாமல் குடும்பம், காதல், நட்பு என மனிதர்களின் உணர்வுகள் மற்றும் உறவுகள் சம்பந்தப்பட்ட கதைகளும் வரத் தொடங்கின. இந்த காலகட்டத்தில் தான் காதல் படங்கள் அதிகம் வந்தன. ஒரு பக்கம் இது கலாச்சார சீர்கேடு என்று விமர்சனம் வைத்தாலும், மறுபக்கம் ரசிகர்கள் கூட்டம் ஓயவே இல்லை. 1990 -2000 இந்த காலகட்டம் உலகமே டிஜிட்டல் மயமாக மாறி இருந்தது. டிஜிட்டல் யுகத்திற்கு ஏற்ப தொழில்நுட்ப வளர்ச்சியும் கண்டது தமிழ் சினிமா. அதுவரை ஃபிலிம் கேமராவில் ஒளிப்பதிவு செய்யப்பட்டு வந்த சினிமா, அதன் பிறகு டிஜிட்டல் கேமராவாக மாறியது. இசையிலும் இசை வாத்தியங்களை தாண்டி கம்ப்யூட்டர் மியூசிக்கும் அதிகம் பயன்பாட்டிற்கு வந்தது. 2010 -2020 இந்தப் பத்து ஆண்டை தான் சினிமாவின் அடுத்த கட்டம் என்றே கூறலாம். ஒரு கலவையாக பல வடிவங்களில் படங்கள் வந்தன. அதில் , இதுவரை தமிழ் சினிமாவில் தொடாத புது கதை களமாக இருந்தது . அதே போல் தொழில்நுட்ப வளர்ச்சியையும் , முழுமையாகப் பயன்படுத்தி CG எனப்படும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் எல்லாம் அச்சுப்பிசகாமல் எடுக்கப்பட்டன. சினிமா ஆயிரம் மாற்றங்கள் கண்டாலும் , அதன் மீது பலதரப்பட்ட விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும் சினிமா என்பது பொழுதுபோக்கு அம்சத்தை தாண்டி மக்களின் வாழ்வியலில் ஒன்றாக மாறிவிட்ட ஒன்று . அது எத்துணை கால மாற்றங்கள் கண்டாலும் சினிமா மீது இருக்கும் ஆர்வமும் , ரசிகர் கூட்டமும் என்றும் குறையாது என்பது தான் உண்மை . இந்தியத் திரைப்படத் தணிக்கை நிறுவனத்தின் புள்ளிவிவரங்களின் படி, 2003ல் இந்தியாவின் மூன்றாவது பெரிய திரைப்படத் தயாரிப்புக் களமாக கோலிவுட் விளங்கியது. 1916 முதலே தமிழில் மௌனத் திரைப்படங்களும், 1931 முதல் வசனங்களுடன் கூடிய திரைப்படங்களும் தயாரிக்கப்பட்டு வருகின்றன. 1939ல் மெட்ராஸ் சட்டமன்றம் ஒப்புதல் அளித்த “பொழுதுபோக்கு வரிச் சட்டம் 1939”, அக்காலத்தில் நிகழ்ந்த தமிழ்த் திரைப்படத்துறையின் அபார வளர்ச்சிக்குச் சான்றாகும்.
டிஜிட்டல் உலகின் பரிணாமம் ஓடிடி தளம்
2020ஆம் ஆண்டிற்கு பிறகு பெரிதும் பரவலாக்கப்பட்ட ’ஓடிடி யுகம்‘ எனலாம். திரைப்படம் பார்க்க திரையரங்குகள் தான் செல்ல வேண்டும் என்பதில்லை என்ற நிலையை ஓடிடி தளங்கள் நிரூபித்தன. கொரானா காலத்தின் போது ஓடிடி தளத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்தது. இருப்பினும் திரையரங்குகளில் சென்று பார்ப்போரும் இருக்கின்றனர்.
இன்ஸ்டாகிராம், யூடியூப், ஓடிடி தளங்கள் மூலம் பிற கலைகளை விட சினிமாவே பிரதானமான பொழுதுபோக்கு அம்சமாக மாறியிருக்கும் காலகட்டம். ”சினிமா அனைத்து கலைகளையும் உள்ளடக்கிய பூதம்” எனுமளவு அனைத்துக் கலைகளும், கலைஞர்களும் அதை ஊடகமாக பயன்படுத்த ஆரம்பித்திருக்கும் காலம்.
உலக சினிமாக்களை எளிதில் பார்க்கக் கிடைக்கும் வாய்ப்பு ரசிகர்களின் தரத்தை மேம்படுத்தியது.
புதிய தொழில் நுட்பங்கள், புதிய கதைக்களங்கள், புதிய முயற்சிகள் என கலையை மட்டுமே நம்பி படம் எடுக்கலாம் என புதியவர்களுக்கு, கலைஞர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் காலகட்டமாக தற்போது விளங்கிக் கொண்டிருக்கிறது சினிமா உலகம்.

